குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் வியூகம்!

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்கள் பெயர்களை ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 4,033 பேர் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. ஆனால், தற்போது பாஜக வசம் 50க்கும் குறைவான சதவீத ஆதரவே உள்ளது.

இதனால், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளாக இருக்கும் மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தேவையான ஆதரவு கிடைத்து விட்டால், தான் கண் காட்டும் – தங்களுக்கு விருப்பமான நபரை குடியரசுத் தலைவராக்கி விடலாம் என்று கணக்கு போடுகிறது மத்திய பாஜக அரசு.

அதேசமயம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக
காங்கிரஸ்
மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான பினோய் விஸ்வத்திடம் பேசியுள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பினோய் விஸ்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே என்னை அழைத்து ஆலோசனை நடத்தினார். மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான கண்ணோட்டம் கொண்ட பொது வேட்பாளரை CPI ஆதரிக்கும் என்று நான் அவரிடம் கூறினேன். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலைப்பாடுதான் என்று அவர் என்னிடம் பதிலளித்தார்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ, பிற எதிர்கட்சிகளிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வாஜ்பாய் காலத்தில் அப்துல் கலாம் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. அதுபோன்று தற்போது பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படும் பட்சத்தில், காங்கிரஸ், திமுக, திரிணாமூல் உள்ளிட்ட அதிக எம்.பி.க்களை கொண்ட பெரிய கட்சிகளின் ஆதரவும் தேவை. பொது வேட்பாளரை அந்த கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.