புதுச்சேரி நகரில் பெருகி வரும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம், பைபாஸ், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட வில்லை. அதன் காரணமாக குறுகலான சாலையிலேயே வாகனங்களில் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது நிரந்தரமாகி விட்டது.
நகரப் பகுதியை சுற்றியுள்ள வீதிகளில், வணிக நிறுவனங்கள் ‘பார்க்கிங்’ வசதி இல்லாமல் செயல்படுகின்றன. சில நிறுவனங்கள் மட்டுமே வாகன நிறுத்துமிடங்களை வைத்துள்ளன. இதனால் பொருட்கள் வாங்க வரும் மக்கள், வேலைக்கு வரும் ஊழியர்கள் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, நகரில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளில் திடீர் கடைகள் முளைத்து, சாலையை குறுகலாக்கி வருகின்றன.
சாலையில் ஆக்கிரமிப்பு
அரசியல் கட்சியினர் துணையோடு சாலைகளை ஆக்கிரமித்து பெட்டிக்கடை என்ற போர்வையில் நடைபாதை உணவகம், பூக்கடை, பழக்கடை நடத்துகின்றனர்.அதோடு, அருகில் உள்ள காலியிடங்களையும் ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர்.
காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்கள், தானியங்கள், மக்காச்சோளம், மரச்சாமான்கள் என அனைத்தையும், சாலையோரத்தில் மினி வேன், டாடா ஏஸ் வாகனம் மற்றும் தள்ளு வண்டிகளில் வைத்தும், சாலையில் குவித்தும் விற்பனை செய்கின்றனர்.இரு சக்கர வாகனங்கள் மற்றும் காரில் செல்வோர், சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்த்ததும் வாங்கும் எண்ணத்தில், எந்தவித சைகையும் செய்யாமல் திடீரென ரோட்டிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.
ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
வாகனத்தில் அமர்ந்தவாறே பொருட்களை வாங்குகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி, சில நேரங்களில் போக்குவரத்தும் ஸ்தம்பித்து விடுகிறது.நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் முடிவு செய்துள்ளது.
அடுத்த 7 நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, பொதுப்பணித் துறையினர் அனைத்து சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகித்து வருகின்றனர்.
சட்டப்படி நடவடிக்கை
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டத்திற்கு சொந்தமான சாலைகளில் கடைகள் அமைத்தும், கட்டட பொருட்கள், தேவையில்லாத பொருட்களை குவித்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதுடன், விபத்துகள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அடுத்த ஏழு நாட்களுக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.இல்லையெனில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, இத்துறையின் மூலம் அகற்றப்பட்டு, கடைக்காரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த சாலைகள்
இந்திரா சிக்னல் முதல் முள்ளோடை வரை, கடலுார் சாலையில் 17 கி.மீ., தொலைவு, விழுப்புரம் சாலையில், இந்திரா சிக்னல் முதல் எம்.என்.குப்பம் வரையிலான 11 கி.மீ., தொலைவு என 38 கி.மீ., சாலை புதுச்சேரி பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.ராஜிவ் சிக்னல் முதல் கனகசெட்டிக்குளம் வரை தமிழக பகுதிகளை தவிர்த்து 7.54 கி.மீ., புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.இதுமட்டுமின்றி இந்திரா சிக்னல் முதல் கோரிமேடு எல்லை வரை 3.52 கி.மீ., ‘நகாய்’ கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறை விதித்துள்ள கெடு வரும் 17ம் தேதி முடிகிறது.