புதுடெல்லி: சீனா விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-2014ம் ஆண்டுகளில் ஒன்றிய அமைச்சராக இருந்த தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வந்த சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தருவதற்கு, கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் பாஸ்கர் ராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வாதங்கள் முடிந்த நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘சீனா விசா முறைகேடு விவகாரத்தில் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ரு.2 லட்சம் பிணைத் தொகையை நீதிமன்றத்தில் அவர் செலுத்த வேண்டும். வழக்கு விசாரணை அமைப்புகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.