வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
‘சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி, செப்டம்பரில் துவங்கும்,” என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நெருக்கடி அதிகரித்துள்ளது. விமானங்களை நிறுத்துவதில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதையடுத்து, சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என, பிரதமர் மோடி, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்தார். இதன்படி, விமான நிலையங்களின் ஆணையக்குழு, சென்னையில் ஆய்வு மேற்கொண்டது.
சென்னை புறநகர் பகுதிகளான பன்னுார் அல்லது பரந்துாரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஆய்வுக்குழு பரிந்துரைத்து உள்ளது.இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று கூறியதாவது:சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு, ஆசை.
இதற்காக சென்னை அருகே இரண்டு இடங்கள் தேர்வாகிஉள்ளன. இது, பசுமை விமான நிலையமாக அமைக்கப்படும். வரும் செப்டம்பரில் இதற்கான பணி துவங்கிவிடும். 2024க்குள் பிரதமர் மோடியின் கனவு நனவாகிவிடும். இது தொடர்பாக, டில்லியில் 16ம் தேதி, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழக அரசு சார்பில் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார். இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
– புதுடில்லி நிருபர் –
Advertisement