சென்னை: சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்து சிலரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தச் சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு காரை மறித்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்த நீடூரைச் சேர்ந்த சாதிக்பாட்சா என்பவர் துப்பாக்கியைக் காட்டி போலீஸாரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, சாதிக்பாட்சா மற்றும் நீடூர் முகமாது இர்பான், ஜஹபர் அலி, கோவை முகமது ஆசிக், சென்னை அயனாவரம் ரஹமதுல்லா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிதி, ஆட்கள் திரட்டும் பணி: அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டது தெரியவந்ததால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை அடுத்த நீடூரில் உள்ள சாதிக்பாட்சாவின் வீடு, அவர் ஏற்கெனவே உத்தரங்குடியில் வசித்த வீடு மற்றும் எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர் ஆகிய இடங்களிலும், கைதான 5 பேருடன் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் தலைமையில் சென்னையில் இருந்து சென்ற என்ஐஏ அதிகாரிகள் நேற்று சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதேபோல, காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதி ஹிதரபள்ளி தோட்டத்தின் உள்ள மாமனார் முகமது யாசிப் வீட்ட்டில் முகமது இர்பான் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்ததால், அங்கும் என்ஐஏ அதிகாரிகள் 6 பேர் நேற்று சோதனை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை அண்ணா சாலை, மண்ணடி இப்ராகிம்ஷா தெரு, குரோம்பேட்டை ஆகிய இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: மதப் பிரச்சார மையம், தற்காப்பு கலைப் பயிற்சி மையம் என்ற பெயரில் சாதிக் பாட்சா சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து, சென்னை வடக்கு கடற்கரைப் போலீஸார் அவரை கடந்த 2018-ல் கைது செய்துள்ளனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சாதிக்பாட்சா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச தீவிரவாத இயக்கத்துக்கு அப்பாவி இளைஞர்களைச் சேர்ப்பதாகவும், அந்த இயக்கத்துக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதாகவும், சர்ச்சையான கருத்துகளைப் பதிவிட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னை, மயிலாடுதுறை , காரைக்கால் உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தியுள்ளோம். சோதனை நடத்தப்பட்ட இடங்களில் கிடைக்கும் தகவல்கள், கைப்பற்றியுள்ள ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.