சென்னை: “ஜெயங்கொண்டம் தனியார் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 25 வருடங்களுக்கு முன் கையகப்படுத்திய நிலங்களை திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்களை வாட்டி, வதைத்து வாழ்வாதாராத்தை கேள்விக்குறியாக்கியதற்கு இந்த நில உரிமையாளர்களிடம் திமுக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜெயங்கொண்டம் தனியார் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக 25 வருடங்களுக்கு முன் கையகப்படுத்திய நிலங்களை உரிமையாளர்களிடமே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திமுகவினரும், அதன் தோழமை கட்சியினரும் ஏதோ மிகப்பெரிய சாதனையை செய்துவிட்டது போல் மார்தட்டிக் கொள்வது வேடிக்கையாக உள்ளது.
முறையான திட்டமிடுதல் இல்லாத நிலையில், இந்த நிலங்களை 1997-ல் கையகப்படுத்தியதே திமுக அரசுதான். திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியாது என்று தெரிந்ததும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முயற்சித்தது அன்றைய அரசு. அதுவும் முடியாத நிலையில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற போது, 2007-ல் என்எல்சி நிறுவனத்தை கெஞ்சி கூத்தாடி இந்த நிலத்தை பயன்படுத்த சொல்லியதும் திமுக அரசே.
உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்த இழப்பீடாக பெரும் தொகையை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் பணம் கொடுக்க வழியின்றி, நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைக்க அரசு முன்வந்துள்ளது.
கால் நூற்றாண்டுகளுக்கு முன் அம்மக்களுக்கு பெரிய சிக்கலை உருவாக்கி நீதிமன்றத்திற்கு அலைய வைத்து, 25 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலங்களில் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து, உரிய இழப்பீட்டை வழங்காமல் நிலங்களை நில உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது பெருமை அல்ல.
உண்மையில், மக்களை வாட்டி, வதைத்து வாழ்வாதாராத்தை கேள்விக்குறியாக்கியதற்கு இந்த நில உரிமையாளர்களிடம் திமுக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒரு தலைமுறையையே பாழடித்த மாபெரும் தவறை செய்துவிட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்றும் சொல்வதும், தமிழக அரசுக்கு கூட்டணி கட்சியினர் நன்றி தெரிவிப்பதும் குரூரமான செயல்” என்று அவர் கூறியுள்ளார்.