ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பித்துவிட்டன. இதனால், வீட்டுக்கடன், கார் கடன் உட்பட அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரத் தொடங்கிவிட்டது. இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் மக்கள் கவலைபடத் தொடங்கியிருக் கிறார்கள்.
கடந்த பல மாதங்களாக பணவீக்கம் எக்கச்சக்கமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, அதைக் கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மாதம் 0.40% அளவுக்கு ரெப்போ ரேட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை அன்றும் ரெப்போ ரேட்டுக்கான வட்டி விகிதத்தை 0.50% அளவுக்கு உயர்த்தியது. இதனால் ரெப்போ ரேட்டுக்கான வட்டி விகிதம் 4.90 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருப்பதால், அந்த வட்டி உயர்வை கடன் வாங்குபவர்களிடம் வசூலிக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
பொதுவாக, ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தைக் குறைத்தால், அந்தப் பலனை கடன் வாங்குபவர்களுக்கு அளிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால், வட்டி விகிதத்தை உயர்த்தினால், உடனே அதை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடும். இப்போது வங்கிகள் அதை செய்யத் தொடங்கி இருக்கின்றன.
வட்டியை முதலில் உயர்த்துவது யார் என்கிற போட்டியில் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவும் முன்னணியில் உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது 0.50% என்கிற அளவில் வட்டியை தற்போது உயர்த்தி இருக்கிறது. இதன்மூலம் அந்த வங்கி தரும் கடனுக்கான வட்டி 8.60 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது வட்டியை உயர்த்தியபின் 7.40 சதவிகிதமாக உள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.50% உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் இந்த வங்கி மொத்தம் .85% வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிற அதேவேளையில், சில வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளன. கோட்டக் மஹிந்திரா வங்கியானது வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்குமேல் வைத்திருக்கும் பணத்துக்கு 0.50% வட்டி விகிதத்தை உயர்த்தி, 4% தரப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இது 3.50 சதவிகிதமாக இருந்தது. அதேபோல, 365 – 389 நாள்களுக்கான டெபாசிட்டுகளுக்கு 0.10%, 390 நாள்களுக்கான டெபாசிட்டுக்கு 0.25% வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இனிவரும் நாள்களில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை சேர்ந்த வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்!