தஞ்சை-நாகை நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே புளியந்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள நாயக்க மன்னர்கள் காலத்திய சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் ரூ.9 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்ற
தஞ்சாவூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் புனரமைக்கப்பட்ட இந்த ஏரி ஏறத்தாழ 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் கடல்போல் தண்ணீர் நிரம்பி இருந்ததால் ‘சமுத்திரம் ஏரி’ என அழைக்கப்பட்டது.
இந்த ஏரியின் மூலம் புன்னைநல்லூர், கலக்குடி, கடகடப்பை, அருள்மொழிப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட பல கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. மேலும் தஞ்சாவூர் நகரின் வடிகாலாகவும் இந்த ஏரி இருந்தது. கோடைக்காலம் உள்பட இந்த ஏரி எப்போதும் தண்ணீர் நிறைந்திருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரி உயிர்ப்புடன் இருந்துள்ளது.
காலப்போக்கில் இந்த ஏரி படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு தென் கரையில் நகர்கள் உருவாகியுள்ளன. முதன்மைச் சாலையில் வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இக் கட்டடங்களுக்கு பட்டாவும், மின் இணைப்பும் வழங்கியுள்ளனர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்.
அதுமட்டுமன்றி, இதன் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் புதை சாக்கடைத் திட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி முழுவதும் ஆகாய தாமரை படர்ந்து, ஏரி என்ற அமைப்பே காணப்படவில்லை. இதன் நான்கு திசைகளிலும் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதால் நீர்பிடிப்புப் பரப்பு குறைந்து வருகிறது. இதனிடையே கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது இந்த ஏரியின் குறுக்கே தான் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி நெடுஞ்சாலை திட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் புறவழிச்சாலை இந்த ஏரியில் இருந்து தான் தொடங்குகிறது. இதற்காக கிட்டத்தட்ட 100 மீட்டர் அகலத்துக்கு இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இதுவரை 30 சதவீதத்துக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஏரி குட்டை போல சுருங்கி விட்டது.
தற்போது இந்த ஏரி 287 ஏக்கர் பரப்பளவு மட்டும் கொண்டுள்ளது. இதன் மூலம் 1,186 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கல்லணைக் கால்வாயில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் சமுத்திரம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கல்லணைக் கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தற்போது இந்த ஏரியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சமுத்திரம் ஏரியில் பறவைகள் தங்கி குஞ்சு பொரிக்கும் வகையில் 3 தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் சரணாலயம் ஏற்படுத்தப்படுகிறது.
அவற்றை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கும் வகையில் படகு சவாரியும் விடப்பட உள்ளது. மேலும், பொழுதுபோக்கு மீன்பிடி பயிற்சித்தளமும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சிறுவர் விளையாட்டு பூங்கா, குடிநீர்-கழிவறை வசதிகள், 40 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் ஆகியவை கொண்ட பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்கின்றனர் அதிகாரிகள். இதற்கிடையே, இந்த ஏரியை ஆக்கிரமித்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றி பரந்து விரிந்த பழைய சமுத்திரம் ஏரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“பழம் பெருமை வாய்ந்த சமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வடக்கு, தெற்கு என இருபுறங்களிலும் குடியிருப்பு மனைகள் ஏற்படுத்தப்பட்டு பெரும் லாபம் சம்பாதித்துள்ளனர். மேற்கு பகுதியில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பல நூறு வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த சமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுருக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது,”
“சமுத்திரம் ஏரி பகுதியில் பறவைகள் சரணாலயம், மீன்பிடி தளம், படகு சவாரி, திட்டுத் தீவுகள் உள்ளடங்கிய சுற்றுலா பொழுதுபோக்கு தலம் அமைவதை வரவேற்கிறோம். அதற்கு முன்பாக அப்பகுதியில் குடியிருப்பு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ள நிலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாகரிகமாக ஒருபுறம் ஒதுக்கிவிட்டு சுற்றுலா பொழுதுபோக்கு தலம் அமைப்பது எந்த வகையில் நியாயம்?,” என்கிறார் துரை.மதிவாணன்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்