தனுஷ்கோடி தீவு பகுதியில் சுற்றித் திரிந்த இலங்கை முன்னாள் காவலர் கைது – விசாரணையில் 'திடுக்' தகவல்!

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதுவரை 22 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டுக்குள் அகதிகளாக சிலர் நுழைய தொடங்கியிருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்து தப்பிவந்த இருவரை ராமேஸ்வரம் போலீஸார் கைதுசெய்தனர்.

இதன் காரணமாக இலங்கை-தமிழ்நாடு கடலோரக் காவல் படை போலீஸார் ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் எல்லைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் அரிச்சல்முனை நான்காம் மணல் திட்டையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் சுற்றித் திரிவதாக கடலோரக் காவல்படை மற்றும் மரைன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் துறைமுகம்

அதையடுத்து இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோரக் காவல்படை போலீஸார் ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் விரைந்து சென்று அந்த நபரைப் பிடித்து மண்டபம் கடலோரக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு மற்றும் கடலோர போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் தினேஷ் காந்தன் (36) என்பதும், இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. “இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியவில்லை. அதனால் சில லட்சம் பணம் கட்டி கள்ள படகு மூலம் இங்கு வந்திருக்கிறேன்… என்னை அகதியாக வைத்துக்கொள்ளுங்கள்” என போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து மண்டபம் போலீஸார் அவரின் புகைப்படம் அடங்கிய தகவல்களை இலங்கை போலீஸாருக்கு அனுப்பி விசாரித்தபோது, அவர் இலங்கை திருகோணமலையில் போலீஸாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “தினேஷ் காந்தன் 6 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை போலீஸில் பணிக்குச் சேர்ந்து, பின்பு திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டு கிடைக்கும் வேலை செய்து வந்திருக்கிறார். பின்னர் 2019-ம் ஆண்டு மீண்டும் இலங்கை போலீஸில் பணிக்குச் சேர்ந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வேலைப் பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கூலி வேலை செய்துவந்திருக்கிறார். இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் வர முயற்சி செய்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்டதினேஷ்காந்தன்

போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் இலங்கைக்கு எச்சரித்து அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் விசாவுக்கு விண்ணப்பித்து விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை வந்திறங்கியிருக்கிறார். அங்கிருந்து பேருந்து மூலம் ராமேஸ்வரம் வந்திருக்கிறார். ஆனால், இலங்கையிலிருந்து படகு மூலம் வந்ததாக நம்ப வைப்பதற்கு, அரிச்சல்முனை நான்காம் திட்டைக்கு கடலில் நீந்தி சென்றதாகக் கூறுகிறார். இருப்பினும் அவரின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. அதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.