சென்னை: அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய பல துறை செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம்வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த 2022-23 நிதியாண்டில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள்சட்டம் 2016-ல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இட ஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்வதை கண்காணிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்’’ என அறிவித்தார்.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு,மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.