நடிகர் விஜயின் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும்நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து அடுத்தடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது ‘தளபதி 66’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதியப் படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு மற்றும் ஷிரிஷின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் ‘தளபதி 66’ படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிக மந்தனா நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கலை பண்டிகையொட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் ஏற்கனவே படப்பிடிப்புகள் முடிந்தநிலையில், தற்போது சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோரின் புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான நிலையில், இன்று விஜய் சண்டைக் காட்சியில் நடிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஒருபக்கம் விஜய் ரசிகர்களே இந்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டாலும், மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்களே இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். படக்குழு இவ்வாறு புகைப்படங்கள், வீடியோக்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.