IND vs SA T20 Series 2022 Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமாடிய நிலையில், 3 சிக்ஸர்களை பறக்க விட்ட ருதுராஜ் 23 ரன்னில் அவுட் ஆனார். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்து அரைசதம் அடித்த இஷான் கிஷன் 48பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 36 ரன்னிலும், 2 பவுண்டரி 2 சிக்ஸர்களை தெறிக்க விட்ட கேப்டன் பண்ட் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். களத்தில் இருந்த ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 3 சிகர்களுடன் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து 212 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்க அணி அதன் தொடக்க வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது. எனினும், களத்தில் ரஸ்ஸி வான் டெர் டுசென் – டேவிட் மில்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. தலா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் விளாசிய இந்த ஜோடியில் வான் டெர் டுசென் 75 ரன்களும், மில்லர் 64 ரன்களும் எடுத்தனர். 19.1 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்கிற கணக்கில் அந்த அணி முன்னிலையில் உள்ளது.
தென்ஆப்பிரிக்க வீரரின் பேட்டை உடைத்த இந்திய வீரரின் பந்துவீச்சு…
இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் 4 ஓவர்களை வீசி 35 ரன்களை விட்டுக்கொடுத்த வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான், 14வது ஓவரில் தனது தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அப்போது அவரது ஓவரை எதிர்கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் சற்றே திணறினார். அவேஷ் கான் தனது 3வது பந்தை நன்கு அழுத்தி பிடித்து அவுட் சைடு- ஆஃப்பில் யார்க்கராக வீசிய வீசினார். அதை வான் டெர் டுசென் மிட்-ஆஃப் திசையில் அடித்தார். ஆனால், பந்தை அடித்ததற்குப் பிறகு அவரது பேட் இரண்டு துண்டுகளாக உடைந்து இருந்து.
வான் டெர் டுசெனின் பேட்டை உடைந்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியும் வருகிறது. தென்ஆப்பிரிக்க வீரரின் பேட்டை உடைத்த இந்திய வீரர் அவேஷ் கானை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
Artist -Avesh Khan#INDvSA #Cricket pic.twitter.com/CI5LCVnEmG
— Nur Hasan (@Nh_nurhasan) June 9, 2022
Rassie’s bat was broken by a Pacey off-side yorker by Avesh Khan pic.twitter.com/6NWHkpEvq6
— Krishav (@iamkrishavC) June 9, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil