சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித் தடங்களில் உருவாகும் கொசுப் புழுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் 6 ட்ரோன்களை வாங்குகிறது. இவற்றை பயிற்சி பெற்ற திருநங்கைகள் மூலமாக இயக்க முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் கூவம், அடையாறு ஆகிய ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய முக்கிய நீர்வழித்தடங்களும் உள்ளன. இவற்றில் கூவம் ஆற்றுடன் 8 கால்வாய்கள், அடையாற்றுடன் 23 கால்வாய்கள், பக்கிங்ஹாம் கால்வாயுடன் 21 கால்வாய்கள் என மொத்தம் 52 இணைப்புப் கால்வாய்கள் 234 கிமீ நீளத்தில் அமைந்துள்ளன.
52 கால்வாய்களில் 30 கால்வாய்கள் மட்டும் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இதர கால்வாய்கள் மற்றும் ஆறுகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதுபோன்ற நீர்வழித் தடங்களில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் சோதனை அடிப்படையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மைய ட்ரோன் பயிற்சி நிலையம் சார்பில் வாடகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
ட்ரோன்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு மருந்துகள் கூவம் ஆற்றில் தெளிக்கப்பட்டன. இந்தட்ரோன்கள் மூலம் மனிதர்களால் சுலபமாக செல்ல முடியாத சேற்றுப் பகுதிகளிலும் மருந்துதெளிக்க முடிந்தது. இதனால்கொசுப்புழு ஒழிப்பில் நல்ல பலன் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் ட்ரோன்களை வாடகைக்கு எடுப்பதால் தினமும்அதிக செலவாகும் நிலையில் சொந்தமாக ட்ரோன்களை வாங்கமுடிவு செய்தது. அதன்படி தற்போது 5 ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இதை உரிமம்பெற்றதிருநங்கைகளைக் கொண்டு இயக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுஉள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் வடக்கு, மத்தியம், தெற்கு என 3 வட்டாரங்கள் உள்ள நிலையில் ஒரு வட்டாரத்துக்கு 2 ட்ரோன்களை கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக மொத்தம் 6 ட்ரோன்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. சில நிறுவனங்களின் பெருநிறுவன சமூகபொறுப்பு நிதியிலிருந்து தற்போது சுமார் தலா ரூ.15 லட்சம்மதிப்பில் 5 ட்ரோன்கள், தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்திடமிருந்து வாங்கப்பட்டுஉள்ளன.
மேலும் ஒரு ட்ரோன் வர உள்ளது. இவற்றை இயக்க அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மைய பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 6 திருநங்கைகளைப் பயன்படுத்த இருக்கிறோம். இவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்று, அதற்கான உரிமமும் பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மருந்து தெளிக்க முடியும். இதன் மூலம் மாநகரப் பகுதியில் கொசுத் தொல்லை வெகுவாக குறையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.