நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளுடைய தொடர்பு காரணமாக அவர் கட்சியிலிருந்து மட்டும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
நுபுர் சர்மாவை கைதுசெய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவதும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்தனர். இதில் இரு தரப்பினரும் படு காயம் அடைந்தனர்.
இந்நிலையில் போராட்டம் பெரிய அளவில் பரவாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என பல்வேறு மாநில அரசுகள் மாநில காவல்துறையை அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில அரசுகளையும் உஷார் படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM