புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதர் முகம்மது நபியை பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் விமர்சித்திருந்தனர். இதனால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. அதேசமயம், நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்நிலையில் இந்த இருவர் மீதும் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் வாரணாசி, கியான்வாபி மசூதி கள ஆய்வில் காணப்பட்ட சிவலிங்கம் மீதும் பலர் ஆட்சேபனைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர். பெண் பத்திரிகையாளரான சபா நக்வீ தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சேப கருத்தை பதிவு செய்திருந்தார். இவரைபோல முஸ்லிம் முக்கியப் பிரமுகர்களான மவுலானா முப்தி நதீம், ஷாதாப் சவுகான், அப்துல் ரஹ்மான், குல்சார் அன்சாரி, முற்போக்கு சிந்தனையாளரான அனில் குமார் மீனா ஆகியோரும் ஆட்சேபக் கருத்துகளை தெரிவித்தனர்.