காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடகா முதல்வருமான சித்தராமய்யா பாஜக தலைவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப் பாடங்களில் இந்துத்துவா கொள்கைகளை திணிக்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரூவில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமை வகித்து சித்தராமய்யா பேசியதாவது:
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி பாடப்புத்தகங்களை காவிமயமாக்குவதற்காக அவை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. ரோஹித் ஒரு தீவிரமான ஆர்எஸ்எஸ் காரர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில், அவரை வைத்து பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே இந்த நடவடிக்கையை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், நாங்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்தராமய்யா பங்கேற்று பேசினார். அப்போது அவர், “நான் என்ன பேசினாலும் பாஜகவினர் நாய்களை போல ஒன்று திரண்டு குலைக்கின்றனர். அவர்கள் அவ்வாறு குரைக்கும் போது, நான் மட்டும்தான் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியதாக உள்ளது. மற்ற எந்த காங்கிரஸ் தலைவர்களும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை” என்றார். சித்தராமய்யாவின் இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM