புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த மாயாண்டி (54), சண்முகம் (48) ஆகிய இருவரும் புதுக்கோட்டையில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் கீரனூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கீரனூருக்கு முன்பாக கருப்பர்கோயில் அருகே வந்தபோது எதிரில் வந்த கருப்பையா என்பவரின் இருசக்கர வாகனம் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில், மாயாண்டி, சண்முகம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இதனையடுத்து அவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கருப்பையா சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீரனூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM