புதுக்கோட்டை மாவட்டம் நரியன்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணமான இரண்டு வருடங்களில் கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பின்பு சூரியகலா தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சூரியகலா தனது மகளுடன் புதுக்கோட்டை கணேஷ் நகர் 5-வது வீதியில் குடியேறியுள்ளார். மகள் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதற்கிடையே தான், சூரியகலாவுக்கும், சேங்கைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியுள்ளது. கணேசன், சூரியகலா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு(2020ல்)ஒருநாள் இரவு முழுவதுமே சூரியகலா வீட்டில் கணேசன் தங்கிவிட்டுச் சென்றுள்ளார். இதற்கு அடுத்த நாள் காலையில் சூரியகலாவின் மகளான சிறுமி தனது அறையில் தூக்கில் தொங்கிய படி இறந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அவரின் தந்தை உடனடியாக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சூர்யகலாவின் ஆண் நண்பரான கணேசன் இறந்து போன சிறுமிக்கு அன்று இரவு தூக்க மாத்திரைகளை பாலில் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், அதற்கு சிறுமியின் தாய் சூர்யகலாவும் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இதையடுத்து, சூர்யகலா, கணேசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கணேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் மேலும், ரூ.3 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் சூரியகலாவுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அதிரடி தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யா, “தாய் என்ற உறவு மிகவும் புனிதமானது, தாய் குழந்தைகளுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த உறவையே கொச்சைப் படுத்தி, தனது சுகத்திற்காக மகளுக்கு இதுபோன்ற நிலையை இந்த வழக்கில் தாய் ஏற்படுத்திவிட்டார். மிகவும் வேதனையளிக்கிறது” என்று கூறி ஆதங்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாரை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் பாராட்டினார்.