கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ., அரவிந்த் லிம்பவளியின் மகள் அண்மையில் தனது பிஎம்டபிள்யூ சொகுசு காரில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவர், சிக்னலில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அபராதம் கேட்டுள்ளனர்.
இதனால், கோபமான அவர் அபராதம் கேட்ட போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.வின் வாகனங்கள் சிக்னலில் நிற்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. அத்துடன் இதனை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாளர்களையும் அவர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “நான் இப்போது செல்ல வேண்டும். காரைப் பிடிக்காதீர்கள். ஓவர்டேக் செய்ததற்காக என் மீது வழக்குப் போட முடியாது. இது எம்.எல்.ஏ., வாகனம். நாங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டவில்லை. எனது தந்தை அரவிந்த் லிம்பாவளி.” என்று அவர் கூறுகிறார்.
ஆனாலும், காவலர்கள் விடாப்படியாக அபராதம் செலுத்த சொல்லியதையடுத்து, இப்போது தன்னிடம் பணம் இல்லை, தயவுசெய்து யாரையாவது வீட்டிற்கு அனுப்புங்கள். அபராதத்தை செலுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஆன்லைனில் அபராதத் தொகையை செலுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர். இறுதியாக, அவரது நண்பர் ஒரு ரூ.10,000 அபராதத் தொகையை செலுத்தியதையடுத்து, காரை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதியளித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ., அரவிந்த் லிம்பாவளி, “அந்த சிறிய பிரச்சினை பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராஜ்பவன் அருகே எனது மகளும் அவரது நண்பர்களும் காரில் அதிவேகமாக சென்றதற்காக போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டு கட்டியுள்ளனர். எனது மகள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நானும் அந்த வீடியோவை பார்த்தேன். எங்கள் குடும்ப அப்படிபட்டது இல்லை. எனது மகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.