மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள என்.எஸ்.கோனார் வீதியில் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான இரும்பு குடோன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அந்த குடோனில் பழைய கார்கள் மற்றும் கார்களுக்கான பழைய உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு இன்றிரவு 7 மணி அளவில் மின்கசிவால் பற்றிய தீ மளமளவென்று குடோன் முழுவதும் பரவியதால் உடனடியாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் மக்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து திடீர்நகர் தீயணைப்புத் துறையினரின் 6 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைக்கும் பணியின்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சம்பவ இடத்திலிருந்த மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முயற்சியில் மாநகராட்சி ஒப்பந்த லாரியின் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக கருதப்படும் நிலையில், இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் பணியில்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM