மது விற்க லஞ்சம் கேட்ட போலீசார் சஸ்பெண்ட்| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

தங்க கடத்தல் குற்றவாளியின்முன்ஜாமின் மனு தள்ளுபடி

கொச்சி-கேரளாவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகம் வாயிலாக தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இரண்டு ஆண்டு களுக்கு முன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகம் வாயிலாக கடத்தப்பட்ட, 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக துாதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப், மாநில அரசின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், தங்க கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவர் குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக, ஸ்வப்னா கூறினார்.

இதை தொடர்ந்து தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கே.டி.ஜலீல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அதில், ‘என் மீதும், பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீதும் ஸ்வப்னா கூறிய புகார்கள் ஆதாரமற்றவை. மாநிலத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் செய்த சதித் திட்டம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ஸ்வப்னா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில், ஸ்வப்னா, சரித் ஆகியோர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘ஜாமினில் வரக் கூடிய பிரிவுகளில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறி, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே தன் மீதான புகார்களை பினராயி விஜயன் மறுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

தங்க கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்ததை அடுத்து, முதல்வர் பதவி விலகக் கோரி, காங்., – பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் பேரணியாக வந்த எதிர்க்கட்சியினர், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தினரை கலைத்தனர்

தங்க கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்ததை அடுத்து, முதல்வர் பதவி விலகக் கோரி, காங்., – பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் பேரணியாக வந்த எதிர்க்கட்சியினர், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தினரை கலைத்தனர்.

கட்டடம் இடிந்து ஒருவர் பலி; 18 பேர் காயம்

மும்பை-மஹாராஷ்டிராவில், இரண்டு மாடி கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்தார்; 18 பேர் காயம் அடைந்தனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கிஇருந்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு, இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.இடிபாடுகளில் சிக்கிய 19 பேர் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் ஆலம், 55, என்பவர் உயிரிழந்தார்; மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். லேசாக காயம் அடைந்த 17 பேர், சிகிச்சைக்குப் பின் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

டில்லி அமைச்சரின் காவல் நீட்டிப்பு

புதுடில்லி-பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் அமலாக்கத் துறை காவல், ௧௩ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் சத்யேந்தர் ஜெயின் மீது, 2015ல் அமலாக்கத் துறை பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 4.81 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்திருந்தது. இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், சத்யேந்தர் ஜெயினை கடந்த மாதம் ௨௯ல் கைது செய்தனர். அவரை ஜூன் 9 வரை காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரது காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சத்யேந்தர் ஜெயினிடம், மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரது காவலை நீட்டிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டு இருந்தது. இதையேற்று, ஜெயினின் காவலை வரும், ௧௩ம் தேதி வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

கராத்தே பயிற்சியாளர் மீது மேலும் 5 சிறுமியர் பாலியல் புகார்

நாக்பூர்-சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கராத்தே பயிற்சியாளர் மீது மேலும் ஐந்து சிறுமியர் பாலியல் வன்முறை புகார் கொடுத்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் கோபால் ராமேஷ்வர் கோண்டனே, 40. கராத்தே பயிற்சியாளரான இவரிடம் ஏராளமான சிறுவர் – சிறுமியர் பயிற்சி பெற்று வந்தனர். இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற 11 வயது சிறுமியை கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்தார்.பெற்றோர் கொடுத்த புகாரின்படி, போலீசார் கோபால் ராமேஷ்வர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், அவர் மீது மேலும் ஐந்து சிறுமியர் தங்களையும் பாலியல் வன்முறை செய்ததாக புகார் கொடுத்துள்ளனர்.இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியர் வேறு யாரும் இருந்தால், அவர்களும் புகார் கொடுக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

தமிழக நிகழ்வுகள்

தீயில் கருகி இளம் பெண் பலி

வடமதுரை-விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி 23. வடமதுரை அருகே பிலாத்து கல்குளம் பகுதியை சேர்ந்த துளசிமணி உடன் அலைபேசி ‘ராங் கால்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அலைபேசி மூலம் காதலை வளர்த்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கல்குளத்தில் வசித்த முருகேஸ்வரி மே 24ல் சமையலில் ஈடுபட்ட போது உடையில் தீப்பிடித்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

தொழிலாளியை வெட்டி சாய்த்த மூவர் கும்பல்

திண்டுக்கல்,- திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த கொத்தனர் அருண் குமார் 25. நேற்று இரவு 8:00 மணிக்குபேகம்பூர் அருகே தனியார் சலுான் கடையில் முடி வெட்ட சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் மீது வேன் மோதி இளைஞர் பலி: 2 பேர் காயம்

சாத்துார்–சாத்துார் அருகே வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் நிமல் 21, சுதர்சன் 20, நாகூர்கனி 21.மூவரும் டூவீலரில் மே 9 இரவு 11:30 மணிக்கு வெம்பக்கோட்டைக்கு (ஹெல்மெட் அணியவில்லை) சென்றனர். சிவகாசி ரோட்டில் தனியார் பெட்ரோல் பல்க் அருகில் டூவீலர் சென்ற போது எதிரில் சிவகாசியிலிருந்து திருவேங்கடம் சென்ற லோடு வேன் மோதியது. டூவீலரை ஓட்டிய நிமல் சம்பவயிடத்தில் பலியானார். சுதர்சன், நாகூர்கனி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வேன் டிரைவர் வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி பெண் பலி

ராமநாதபுரம்-ராமநாதபுரம் பாரதிநகர் காலாங்கரை சண்முகம் மனைவி ஜோதி 49.மகள் திவ்யாவுடன் சேதுபதிநகர் முதல் தெருவில் வசித்தார். நேற்று நள்ளிரவு ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 13வது தெருவில் திருமண வீட்டில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றார். சமையல் பாத்திரங்களை கழுவிய போது பந்தலில் கட்டியிருந்த டியூப்லைட் வயர் பந்தல் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதை அறியாமல் பந்தல் கம்பியை தொட்ட ஜோதி துாக்கி வீசப்பட்டார். சமையல் பாத்திரத்தில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.பட்டணம்காத்தான் தனியார் மருத்துவமனையில் இறந்தார். கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரிக்கிறார்.—–

latest tamil news

மது விற்க லஞ்சம் கேட்ட2 போலீசார் ‘சஸ்பெண்ட்’

அச்சிறுப்பாக்கம், :அச்சிறுப்பாக்கம் அருகே, ஜல்லிமேடு பகுதியில் மதுபாட்டில் விற்க லஞ்சம் கேட்ட விவகாரத்தில், இரு போலீசார் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

மதுராந்தகம் அடுத்த, ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 45. இவர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்ததால், ‘குண்டர்’ தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இருப்பினும், இவரது மனைவி மாலா, 30, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மதுக்கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி, கூடுதல் விலையில் விற்று வந்துள்ளார்.இந்த நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர், முருகனின் மனைவியிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பான ஆடியோ, சமீபத்தில் வெளியானது.அதில் மாலா, ‘சரக்கு விற்றதற்காக 3,000 ரூபாயை ‘கூகுள் பே’ வாயிலாக அனுப்பியுள்ளேன்’ என்கிறார்.

அதற்கு காவலர் பாலசுப்பிரமணியன், ‘4,000 ரூபாய் அனுப்பு. இல்லையென்றால் கைது செய்து விடுவேன்’ என, பதில் கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இது தொடர்பாக புகார் வந்த நிலையில், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதில் குற்றம் உறுதியானதால், இருவரையும் பணியிட நீக்கம் செய்து, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்யபிரியா உத்தரவிட்டுஉள்ளார்.

இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம்

குரோம்பேட்டை, :குரோம்பேட்டையில், ரயில்வே சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தன.

குரோம்பேட்டையில், ரயில்வே சுற்றுச் சுவரை ஒட்டி, 30க்கும் அதிகமான, பழைய இருசக்கர வாகனங்கள் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை, அங்கு இயங்கி வந்த வாகன நிறுத்தத்தில், பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் என கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று காலை அந்த வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தன. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 20க்கும் அதிகமான வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.