அயர்லாந்தில் தன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சுயநினைவின்றிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள மைசூருவைச் சேர்ந்தவர் சீமா பானு (37). 13 ஆண்டுகளாக தன் கணவர் சமீர் சையது, பிள்ளைகளான அஸ்ஃபிரா ரிஸா (11) மற்றும் ஃபைஸன் சையதுடன் (6) Rathfarnham என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தார் பானு.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பானுவும் பிள்ளைகளும் பல நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது. பொலிசார் வீட்டுக்கு வந்தபோது, பானு மற்றும் பிள்ளைகளுடைய உயிரற்ற உடல்கள்தான் கிடைத்தன. கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள் அவர்கள் மூவரும்.
அவர்கள் கொல்லப்பட்டபோது தான் ஊரில் இல்லை என்று கூறியிருந்தார் பானுவின் கணவரான சமீர் சையது.
அவர் சோகமே உருவாக தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இறுதிச்சடங்கு நடத்தினாலும், பொலிசாருக்கு ஆரம்பம் முதல் அவர் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், அவர்களுடைய சந்தேகத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒரு மாதம் ஆனது.
2020ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 28ஆம் திகதி, தன் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு Midlands சிறையிலடைக்கப்பட்டார் சமீர்.
ஜூன், அதாவது இம்மாதம் 15ஆம் திகதி விசாரணைக்குட்படுத்தப்பட இருந்தார் அவர்.
ஆனால், நேற்று மதியம் 3.00 மணியளவில் சமீர் தனது சிறை அறையில் பேச்சு மூச்சின்றிக் கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்ற பொலிசார் அங்கு சென்றபோது, சமீர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
அவர் எப்படி இறந்தார் என்ற தகவல்கள் இன்னமும் வெளிவரவில்லை.
ஒரு பக்கம், சமீர் செய்த தவறுக்கு அவருக்கு விதியே தண்டனை கொடுத்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றினாலும், இன்னொரு பக்கமோ, அவர் அழகான தன் மனைவியையும், அன்பான அழகுக் குழந்தைகள் இருவரையும் ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் தெரியாமலே வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.