அமராவதி: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் 2 கிணறுகளும் வறண்டதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமராவதி மாவட்டத்தில் உள்ள கதிகாள் கிராமத்தில் 1,500 மக்கள் வசித்து வருகின்றனர். அங்கிருக்கும் 2 கிணறுகள் தான் அவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன. அந்த கிணறுகளும் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் தினமும் 2, 3 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு அந்த கிணறுகள் நிரப்பப்படுகின்றன. அந்த நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். பாதுகாப்பு தடுப்பு கூட இல்லாத அந்த கிணற்றில் உயிரை பணயம் வைத்து அவர்கள் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். அந்த தண்ணீரும் அசுத்தமாக தான் இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் விரைந்து மருத்துவமனைக்கு செல்ல சாலை கூட இல்லாத நிலையில் தான் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.