நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. அதன் மீதான பரிசீலனைகள் முடிந்து இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி., இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜகவுக்கு 2, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரசிற்கு தலா ஒரு இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எஞ்சிய ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், கர்நாடகாவில் 4 இடத்துக்கு பாஜகவில் 3, காங்கிரஸில் 2, மஜதவில் ஒருவர் என 6 பேர் போட்டியிடுகின்றனர்.
ராஜஸ்தானில் 4 இடத்துக்கு காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 5 பேர் போட்டியிடுகின்றனர். ஹரியானாவில் உள்ள 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸில் தலா ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 3 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன், கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக ப.சிதம்பரம், அதிமுக தரப்பில் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.