புதுடெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக இருக்கும் 1,456 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 1,456 இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரியும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்த தமக்கு இடம் ஒதுக்கீடு செய்யாமைக்கு எதிராகவும் அதர்வ் என்ற மருத்துவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, உரியமுறையில் இடங்கள் ஒதுக்கி தரப்படவில்லை என்றால் நீதிமன்றமே தலையிட்டு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தது.இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் காலியாக உள்ள 1,456 மருத்துவ இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூலம் நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் இடங்களை கொண்ட மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் 1,456 இடங்கள் மட்டுமே காலியாகவே உள்ளது. அதிலும், ஏற்கனவே மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளில் 8 முதல் 9 சுற்று கலந்தாய்வு நடத்தபட்ட பின்னரும் சில நான்-கிளினிக்குகள் படிப்புக்களுக்கான இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. இதனை மீண்டும் கலந்தாய்வு நடத்தி நிரப்ப கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இந்த கல்வியாண்டில் பாதிப்பு மற்றும் கால விரயத்தை ஏற்படுத்தும். மருத்துவ படிப்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது பொது சுகாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் அனைத்தையும் கருத்தில் கொண்டு மனுதாரர்கள் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இருப்பினும், வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க ஒன்றிய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி ஆகியவை எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.