புதுடெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனுவை, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. நாடு முழுவதும் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இடஒதுக்கீடுப்படி கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஒன்றிய அரசு ஒதுக்கீட்டில் 2021-22ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,456 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு வழங்க தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நடைபெற்று வருகிறது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலும், ஒன்றிய அரசும் மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றன. காலியாகவுள்ள 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை ஒன்றிய அரசும், மருத்துவ கவுன்சிலிங் குழுவும் (எம்சிசி) இன்னும் ஏன் நிரப்பவில்லை? இதற்காக மற்றொரு சுற்று கவுன்சிலிங்கை நடத்தலாம். காலியாக ஒரு இடம் இருந்தாலும் அதை நிரப்ப வேண்டும். அதை வீணாக்கக்கூடாது’ என்று தெரிவித்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.இந்திய மருத்துவ கவுன்சிலிங் குழு சார்பில், ‘நடப்பு கல்வியாண்டிற்கான கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இடையில் கவுன்சிலிங் நடத்தினால் குழப்பம் ஏற்படும். மனுதாரர் தரப்பில் காலியாக உள்ளதாக கூறப்படும் இடங்களில் மருத்துவம் சாராத இடங்களும் உள்ளன. எனவே சிறப்பு கலந்தாய்வு நடத்த முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘வரும் கல்வியாண்டில் இருந்து இதுபோன்ற காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பிரச்னைக்குகளுக்கு தீர்வு காண வேண்டும்’ எனக்கூறி சிறப்பு கலந்தாய்வு கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.