வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-கடந்த, 2021ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில் நிரப்பப்படாத இடங்களுக்கு, சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1,456 இடங்கள்
கடந்த, 2021ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வுகள் முடிந்து, கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இதில், அனைத்திந்திய ஒதுக்கீட்டு பிரிவில், 1,456 இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. ‘வீணாகியுள்ள இடங்களுக்கு, சிறப்பு கலந்தாய்வு நடத்தி அவற்றை நிரப்ப வேண்டும்’ என, முதுநிலை நீட் தேர்வு எழுதிய டாக்டர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து, டாக்டர்கள் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களும், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருதா போஸ் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன், நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொது சுகாதாரம் மற்றும் மருத்துவப் படிப்பின் தரம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டினால் தான், சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கூடாது என்ற முடிவை, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டியும் எடுத்துள்ளன.
விசாரணை
இதை, தன்னிச்சையான முடிவாக கருத முடியாது. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையே, டில்லியில் உள்ள செவிலியர் கல்லுாரிகளில், நிரப்பப்படாமல் உள்ள 110 இடங்களை, கூடுதல் சுற்றின் வாயிலாக நிரப்பக் கோரிய மேல்முறையீட்டு மனுவும், இதே அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Advertisement