முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்களை நம்ப வேண்டாம்! அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை..

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை, அவற்றை நம்ப வேண்டாம் என  என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான மாணவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்குகிறது. அதே போல் பொது பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில்,  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மோசடி பேர்வழிகள் மாணவர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாகவும்,  குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களை குறிவைத்து, முதல் செமஸ்டர் கட்டணத்துடன் 1லட்சம் ரூபாய் செலுத்தினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என இ-மெயில் அனுப்பப்படுவ தாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என்று தெரிவித்துள்ளது. NRI மாணவர்களை குறிவைத்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் போலியானது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியதாக சென்றுள்ள போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.