திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து நடத்துகிற உணவுத் திருவிழா 2022- வை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார். ஆவடி கனரக வாகன தொழிற்சாலையின் (HVF) மைதானத்தில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த உணவு திருவிழா இன்று(ஜூன் 10) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) வரை மூன்று நாள்கள் நடைபெறும்.
விழாவுக்கு தலைமையேற்று பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், “ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கிய eat right challenge-ல் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. இது இந்தியாவிலேயே சிறந்த 60 மாவட்டங்களில் திருவள்ளூர் நான்காவது இடத்தை பிடித்தது. சமையல் எண்ணெயில் இரண்டு முறைக்கு மேல் மறுபயன்பாடு செய்யக் கூடாது. ஆனால் ஓட்டல்களில் ஒரு மாதம் இரண்டு மாதம் வரைக்கும் கூட பயன்படுத்திய எண்ணெயை மறுபயன்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு இதை மாற்ற வேண்டும் என அறிவித்திருக்கிறது” என்றார்.
அமைச்சர் சா.மு. நாசர் பேசும்போது, “மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டம் தான் முதலிடம் பிடித்திருக்கிறது. பாபர், மாம்பழத்துக்காகவே இந்தியாவின் மீது படையெடுத்தார். ஷாஜஹான், தமிழ்நாட்டு மாம்பழத்தின் ருசியை மும்தாஜைப்போலவே நேசித்தவர். தமிழகத்தின் கூழில் ஆரம்பித்து அனைத்து பாரம்பரிய உணவுகளுக்கும் தனிச்சுவை இருக்கிறது; தனிப்பெருமையும் இருக்கிறது.
150 நாடுகளின் உணவு வகைகள், சமையல் போட்டி, உண்ணும் போட்டி ஆகியன இந்த உணவுத் திருவிழாவை ருசிக்க வைக்க இருக்கின்றன. திருவிழாவின் இறுதி நாளான ஞாயிறன்று உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ‘வாக்கத்தான்’-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களுடன் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்றார் உற்சாகமாக..!