திருப்பதி : மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களை போல் போராட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி எஸ்.வி.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுக்கான கலந்தாலோசனை கூட்டத்தில் பேசிய என்.வி.ரமணா, இந்த கருத்தை வலியுறுத்தி உள்ளார். தாய்மொழியை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மொழி உரிமைகளை பெற தமிழர்களை போல் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக் கொண்டுள்ளார். செம்மரம் கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது என்று கூறியிருக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தண்டனை காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அறிய மரங்களை வெட்டுவது கொலை குற்றத்திற்கு சமம் என்று கூறியுள்ள ரமணா, செம்மரங்கள் அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் இருப்பதால் அவற்றை காக்க வேண்டியது நமது கடமை என்று கூறியுள்ளார்.