கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி, அங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக ஒரு மேடைப் பேச்சாளர் போல பேசுகிறார். அவருடைய வார்த்தைகளில் மரியாதை இல்லை, ஒரு தேசிய கட்சிக்கு இருக்கக்கூடிய தகுதியுடன் அவர் பேசாதது வருத்தத்தை அளிக்கிறது. கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வார்த்தை பிரயோகம் அப்படி இருக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி இவர்களைப் போன்று பல மடங்கு பெரிய கட்சி. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி. காங்கிரஸ் கட்சி குறித்து கொள்கை ரீதியில் விமர்சிக்கலாம். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு சூடு சொரணை இல்லை என்ற வார்த்தையை பிரயோகம் செய்து இருக்கிறார்.
எப்போது இவர் இதைப் போன்ற மேடைப் பேச்சாளரானார் என்று எனக்கு தெரியவில்லை. அல்லது அவருக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர்கள் இப்படியெல்லாம் பேசினால்தான் விளம்பரம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கக்கூடும். விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு தேசிய கட்சியில் இருப்பவர்கள் இப்படியான வார்த்தையை பிரயோகிக்கக் கூடாது என நல்ல முறையில் அவருக்கு ஆலோசனை சொல்கிறேன். விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் மீண்டும் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் சென்னைக்கு நீங்களும், பிரதமர் மோடியும் வந்தீர்கள். பிரதமர் ரூ.32,000 கோடிக்கு திட்டங்களை அறிவித்தார். அதில் 90% திட்டங்கள் ஏற்கனவே மன்மோகன்சிங் காலத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கின்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள். நான் அந்த வார்த்தையை சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ?
ஏற்கனவே அடிக்கல் நாட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற திட்டத்திற்கு, நீங்கள் கொஞ்சம் பணம் ஒதுக்கி புதிதாக கல்வெட்டு வைக்கிறீர்களே? அந்த மேடையில் தமிழக முதல்வர் தமிழக நலன்களை பற்றி பேசினார். அவர் அரசியல் பேசவில்லை. என்னுடைய மாநிலத்திற்கு என்ன வேண்டும் என்று பிரதமரிடம் கேட்காமல், எங்கள் மீதிருக்கும் வழக்குகளையெல்லாம் விட்டுவிடுங்கள், எங்கள் மீது வழக்குகளை போடாதீர்கள் என்றா கேட்கமுடியும் ? அவர் கேட்பது அனைத்துமே மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டது. மாநிலத்தின் தேவைகள் சம்பந்தப்பட்டது. மேடையில் பிரதமர் இருக்கும் போது முதல்வர் என்னென்ன வார்த்தைகள் பேச வேண்டும், பேசக் கூடாது என்பதற்கு விதிமுறைகள் ஏதாவது இருக்கிறதா?
பிரதமரையோ அவர் சார்ந்திருக்கும் கட்சியையோ முதல்வர் விமர்சிக்கவில்லையே? அந்த மேடையில் மாநில உரிமை தொடர்பாக முதல்வர் கேட்டதற்கு பிரதமர் எதுவுமே பதிலளிக்கவில்லை. இப்போது நான் கேட்கிறேன் பிரதமருக்கு சூடு சொரணை இல்லை, முதல்வர் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்று சொன்னால் அது முறையா? குறைந்தபட்ச விளம்பரத்திற்காக இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள். இது தவறு, இது ஏற்க முடியாது என்பதை நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன். யாரோ உங்களுக்கு எழுதிக் கொடுப்பதை வைத்துக்கொண்டு முதல்வர் மீது நீங்கள் குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு வீட்டுவசதித்துறை அலுவலகத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு உதவுவதற்காக ஒரு முதன்மை அதிகாரியை நியமித்திருக்கிறார்கள் என்றும் தனியார் நிறுவனத்திற்கு உதவுவதற்காகவே அந்த அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அண்ணாமலை ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். ஆனால் 1976-ல் இருந்து அந்த பதவி இருக்கிறது என்றும், அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவிக்கு வருகிறார்கள் என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறாரே இப்போது உங்கள் முகத்தை நீங்கள் எங்கு வைத்துக் கொள்வீர்கள்?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ந்து பிரச்னைகள் நடைப்பெற்று வருகிறது. 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற கோயிலாக நடராஜர் கோயில் இருக்கிறது. அங்கிருக்கும் தீட்சிதர்களுக்கு சில சிறப்பு உரிமைகள் இருக்கின்றன. அதை யாரும் மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றமே அதை ஓரளவுக்கு அனுமதித்திருக்கிறது. தீட்சிதர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்டு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது என்கிற பொழுது, அதை உயர்வாகக் கருதி அந்த எல்லைக் கோட்டைத் தாண்டாமல் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
தீட்சிதர்கள் தங்களுடைய எல்லையை மீறி நடந்து கொள்ளக்கூடாது. இரண்டு தரப்பும் இணைந்து ஒரு சுமூகமான சூழலில் இயங்க வேண்டும். என்னை பொருத்தவரை தமிழக முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு அறநிலையத் துறையையும், தீட்சிதர்களையும் அழைத்து என்ன பிரச்னைகள் இருக்கிறது என்று பேச வேண்டும். அதற்குமேல் அதை அரசியலாக்கியோ அல்லது மதமாக்கியோ பிரச்னைகளை உருவாக்குவதில் தமிழ்நாடு காங்கிரஸ் உடன்படாது.
மதுரை ஆதீனத்தின் பேச்சு திமிரானது. நீங்கள் எப்படி அப்படி பேசலாம்? மதுரை ஆதீனம் என்ன சொல்கிறார், அரசியல்வாதிகள் இதற்குள் நுழைய கூடாது என்று. அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. இந்து அறநிலையத்துறையில் அரசியல் தலையிட வேண்டாம். ஆனால் அரசாங்கம் நுழையலாம் அல்லவா? அரசியல் வேறு அரசாங்கம் வேறு. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான் இந்து அறநிலையத்துறை அமைக்கப்பட்டிருக்கிறது. கோயில்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் வேலை. இல்லையென்றால் கோயில்கள் எப்படி இருக்கும்? ஒரு தரப்பு மக்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர்கள் நீங்கள்தானே? ஆதீனத்திற்குள் மனிதாபிமானம் இருந்ததா?
அன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று சொன்னீர்கள். இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்கிறீர்கள். நான் மதுரை ஆதீனத்துக்கு சொல்கிறேன் நீங்கள் ஆதீனமாக பேசுங்கள் அரசியல்வாதியாக பேசாதீர்கள். தமிழக காங்கிரஸ் ஆன்மீகத்தை விரும்புகின்ற, ஆன்மீகத்தை ஆதரிக்கின்ற, ஆன்மீகம் வளர வேண்டும் என்று நினைக்கிற ஒரு சித்தாந்தம். அதனால் நீங்கள் ஆன்மீகத்தை வியாபாரமாக, அரசியலாக மாற்றாதீர்கள். அது தவறு. அவர் பேசிய வார்த்தைகளில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் ஊடுருவல் இருக்கின்றது. மதுரை ஆதீனம் அரசியல் பாதையை நோக்கி செல்கிறார். அவர் பாஜக பாதையை நோக்கி செல்கிறார். அது தவறு என்று நான் கூறுகிறேன்” என்றார்.