ரஜினிக்கு ஓகேன்னா எனக்கு ஓகே – கமல் அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து, கடந்த ஜூன் 3ல் திரைக்கு வந்துள்ள படம் ‛விக்ரம்'. ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் இன்னும் வசூலை அள்ளி வருகிறது. இதன் வெற்றியால் படக்குழுவினருக்கு பரிசு வழங்கி மகிழ்ச்சியை கொடுத்து வருகிறார் கமல். இயக்குனருக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள லெக்ஸ் ரக சொகுசு கார், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு தலா ஒரு பைக் என வாங்கி கொடுத்து அசத்தினார். சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரொலெக்ஸ் கை கடிகாரம் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன். அவர் பேசும்போது, ‛‛நன்றியை தவிர வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை. இந்த வெற்றி பயத்தை தருகிறது. இது போதும் என எண்ணவில்லை. இன்னும் உழைக்கணும் என தோன்றுகிறது. டயலாக்கே பேசாமல் நடித்துவிட்டேன். அதனால் விக்ரம் படத்தில் முதல் பாதியில் பேசாமல் நடித்தது பெரிதாக தெரியவில்லை. மருதநாயகம் படத்தில் இதுவரை 35 நிமிட காட்சிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. முன்பு எடுத்த எந்த ஒரு காட்சிகளையும் வீணாக்காமல் இப்போதும் எங்களால் ஷுட்டிங்கை தொடர முடியும். மருதநாயகம் படத்தின் ஷுட்டிங் எந்த நேரத்திலும் துவங்கப்படலாம். மருதநாயகம், மர்மயோகி, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் பழசாகிவிட்டது. புதிதாக கொடுக்க விரும்புகிறேன்.

விஜய்யை அய்யா என அழைத்தது பாசத்தில் தான். சிவாஜி கணேசன் என்னை சமயங்களில் அப்படி தான் அழைப்பார். அது மாதிரி தான் இதுவும். விஜய்யுடன் பேசி உள்ளேன். கண்டிப்பாக விரைவில் ஒரு படம் ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வரும். ரஜினியுடன்மீண்டும் நடிக்க தயார். அந்த படத்தை லோகேஷ் இயக்கலாம். ஆனால் அதை ரஜினியும், லோகேசும் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் சம்மதித்தால் உங்களிடம் அடுத்து கூறுகிறோம்.

தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் வெற்றி பெறுவது பற்றி பேசுகிறார்கள். என்னை பொருத்தமட்டில் அது இந்திய படமாக வெற்றி பெற்றது என்றே நினைக்கிறேன். ஷோலே மாதிரியான படங்களை நாம் கொண்டாடி உள்ளோம். ஆகையால் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும்.

இவ்வாறு கமல் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.