ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி
இதனை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில், கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி போராட்டமொன்றை இளைஞர்கள் ஆரம்பித்திருந்த நிலையில், இந்த போராட்ட களத்தில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமொன்று அமைக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை தீர்வின்றி இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மே மாதம் 9 ஆம் திகதி
இதன் தொடர்ச்சியாக இந்த போராட்டம் கடந்த மே மாதம் 9ம் திகதி வன்முறையாக மாறியது. அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை நடத்தி பதவி விலகியிருந்ததுடன்,இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட தரப்பினர், அங்கிருந்து வெளியேறி பேரணியாக காலி முகத்திடலை நோக்கி சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்ற குழுவினர், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம பகுதியிலுள்ள கூடாரங்களுக்கு சேதம் விளைவித்து, அமைதி வழியில் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில்,இது பாரியளவில் வன்முறையாக மாறி பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பல நாடாளுமன்ற, அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் தலைமறைவாகியிருந்தது.
ஜூலை 9 ஆம் திகதி
இவ்வாறான பின்னணியில், நேற்றைய தினம் ஜூலை 9 ஆம் திகதி தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்திருந்ததுடன்,இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை எனவும், தன்னை நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ச்சியா நடந்தேறியுள்ள நிலையில்,ராஜபக்சக்களுக்கு 9 என்பது பொருத்தமற்ற நாள் எனவும்,அரசியல் வாழ்க்கையில் பல மறக்க முடியாத சம்பவங்களை பதிவு செய்த நாளாகவும் இந்த நாள் பலர் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
ஏப்ரல் 9ம் திகதி தொடங்கிய போராட்டம்..! மே 9 ஆம் திகதி வீட்டுக்கு சென்ற மகிந்த..! ஜூன் 9 ஆம் திகதி வீட்டிற்கு சென்ற பசில்! இந்த வரிசையில் அடுத்த ஜூலை 9ம் திகதி என்ன நடக்கும் என்பதை பார்ப்பதற்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.