அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலைவழக்கில் விசாரணையை மேற்கொள்ளும் சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்ற தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் என். ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி, சிபிஐ ஆகியவை 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டடது. அதன்படி தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தது. அப்போது, புதிய துப்பு துலங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழுவின் இரண்டாவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து வருவதால், அடுத்தக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி டீக்காராமன், 4 கால வார அவகாசம் வழங்கி வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM