ரூ.2 லட்சத்துக்கு ரூ.10 லட்சமா?: ஃபாஸ்ட் புட் கடைக்காரர் தற்கொலையின் பகீர் பின்னணி!

சென்னை கொளத்தூர் லட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சுதாகர் (44). இவர் சென்னை அண்ணா சாலையில் ஃபாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், தீபக் (22), ஜோயல் (15) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுதாகருக்கு செங்குன்றம் பகுதியில் சொந்த வீடு ஓன்று உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த வீட்டை விற்பனை செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுதாகர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்கு வந்த ராஜமங்கலம் போலீசார் சுதாகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவரது மனைவி மகேஸ்வரி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் சுதாகர் சிலரிடம் பணம் கடனாக பெற்றதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் பணம் கொடுத்தவர் கந்து வட்டி கேட்டு கணவரை மிரட்டி வந்தாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எனது கணவர் சுதாகர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 
image
ஆகையால் தன் கணவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் சுதாகர் மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் பெரவள்ளூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜன், கொளத்தூரை சேர்ந்த மைதிலி, பாடியை சேர்ந்த கல்லூரி மாணவன் காமேஸ்வரன், ரவி ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுதாகர் செங்குன்றம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜன் என்ற நபரிடம் இருந்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். அதன் பின்பு மீதி 25 லட்சம் ரூபாய் பணத்தை தர முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இது சம்பந்தமாக அடிக்கடி சுதாகருக்கும் ராஜனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் வாங்கிய கடனுக்காக கொளத்தூர் வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணிடம் இருந்து சுதாகர் இரண்டு லட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அதற்காக தான் கையொப்பமிட்ட காசோலையை மைதிலியிடம் கொடுத்து வைத்து இருந்தார் சுதாகர். இதனால் மைதிலியும் அடிக்கடி தான் கொடுத்த பணத்தை சுதாகரிடம் கேட்டு வந்துள்ளார்.
இதனிடையே சுதாகர் கொடுத்த வெற்று செக்கை வைத்து ரூ.10 லட்சத்தை எடுக்க அதை வங்கியில் மைதிலி செலுத்தியபோது செக் பவுன்ஸ் ஆகியுள்ளது. அதன்பிறகு சுதாகரிடம் நீ 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் கூறி வந்துள்ளார். இவ்வாறு ராஜன் மற்றும் மைதிலி ஆகிய இருவரின் தொடர் அழுத்தத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து சுதாகர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
image
(கைது செய்யப்பட்ட மைதிலி)
ரியல் எஸ்டேட் புரோகர் ராஜன் சுதாகருக்கு சொந்தமான இடத்தை தன்னுடைய இடம் என்றும், அந்த இடத்திற்கான ஆவணங்கள் தொலைந்து போய் விட்டது என கூறி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து FIR பெற்று பின்னர் சுதாகர் இடத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மைதிலியும் சுதாகரை பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர் அளித்த வெற்று காசோலையில் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்பது போல தயார் செய்து வங்கியில் செலுத்தி காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தவுடன் சுதாகருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் ராஜன் தொல்லை, மற்றொரு புறம் மைதிலி மிரட்டல். இதனால் மனமுடைந்த சுதாகர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் லிசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் நிலப்பிரச்சனை மற்றும் போலி ஆவணம் தொடர்பான விவகாரம் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் செங்குன்றம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ: 
புதிதாக உருவாக்கப்பட்டது கொளத்தூர் காவல் மாவட்டம்! புதிய துணை ஆணையர் நியமனம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.