பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளிப்படுத்தியதால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்கியபாடில்லை. இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவுக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், இராக், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் இந்த விவகாரத்தில் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கின்றன. இந்த வளைகுடா நாடுகளுடனான உறவில் விரிசல் உண்டானால், இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
இந்தியா – வளைகுடா நாடுகளின் நட்புறவு!
பல ஆண்டுகளாக இந்தியாவும், வளைகுடா நாடுகளும் நல்ல நட்புறவில் இருந்துவருகின்றன. வர்த்தகரீதியாக வளைகுடா நாடுகளுடன் இந்தியா நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதும் சரி, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி வளைகுடா நாடுகளுடனான உறவில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட்டதில்லை. தற்போது இந்தியாவின் ஆளும்கட்சியான பா.ஜ.க-வைச் சேர்ந்த இருவர், நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்துகளை வெளிப்படுத்தியதால், வளைகுடா நாடுகள் கொந்தளிப்பில் இருக்கின்றன. குறிப்பாக கத்தார், `இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்திவருகிறது. இதையடுத்து, வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்பட்டன. இருந்தும், தற்போது வரை அப்படியான எந்த விஷயமும் நடக்கவில்லை.
வளைகுடா நாடுகளுடனான உறவு ஏன் முக்கியம்?
ஒருவேளை வளைகுடா நாடுகளை பகைத்துக் கொண்டால், பெரும் பாதிப்புகளை இந்தியா சந்திக்க நேரிடும். வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பில் ஆறு நாடுகள் இருக்கின்றன. இந்த ஆறு நாடுகளில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 85 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இந்த ஆறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், ஆண்டுதோறும் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்தத் தொகை மூலம் இந்தியாவிலுள்ள நான்கு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைகின்றன.
இராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மட்டுமே சுமார் 50 சதவிகித கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது இந்தியா. இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயு தேவையில், 40 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்கிறது கத்தார். வளைகுடா நாடுகளுக்கும் இந்தியாவுக்குமிடையே ஆண்டுதோறும், சுமார் 97 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
“வளைகுடா நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டால், இனி அங்கிருக்கும் நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்த முன்வரமாட்டார்கள். இந்தியா, பெட்ரோலிய பொருள்களை இறக்குமதி செய்வதிலும் பிரச்னைகள் ஏற்படும்” என்று எச்சரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரியான அகமது இது தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்கிறார். “அரசியல் சார்பற்ற, சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகிற, தொழில்நுட்ப அறிவு வாய்ந்தவர்களின் நாடாகத்தான் வளைகுடா நாடுகள், இந்தியாவைப் பார்க்கின்றன. இவ்வாறு வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பேச்சுகள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் இருக்கும் நிறுவனத்தினர் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தி கொள்வார்கள். இந்தியர்களிடம் எதிர்ப்புணர்வு இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதால், அவர்களை வேலைக்கு எடுக்க விரும்பமாட்டார்கள்” என்கிறார் அகமது.
இந்த விவகாரத்தில், மோடி அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!