மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பைத் தடுக்க நவீன மருத்துவத்தால் முடியும். ஆனால் அதற்கான நடைமுறைகளைக் கண்டறிய இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம் என்கிறது அறிவியல்.
‘பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரும் துன்பமும்
யான் நினக்கு உரைத்து நின் இடர்வினை ஒழிக்க
காயசண்டிகை வடிவானேன்’
என்கிறது மணிமேகலை.
அதாவது இறந்தபின் பிறப்பு உண்டு என்பது நம்பிக்கை. எந்த மனிதனின் வாழ்க்கையும் மரணத்துடன் முடிந்துவிடுவதில்லை என்பது உலகில் பலரின் நம்பிக்கை. ‘ஒருவன் மரணிக்கும்போது என்ன நினைக்கிறானோ, அப்படியே அவனின் அடுத்த பிறவி அமைகிறது’ என்கிறது கீதை.
‘உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி எழுதலைப் போன்றது பிறப்பு’ என்கிறார் வள்ளுவர். இறந்தவர் மீள்வார் என்ற அடிப்படையில்தானே எகிப்தில் வானளாவிய பிரமிடுகள் எழுந்தன. கருட புராணம், திருவாசகம், மணிமேகலை, கடோபநிஷதம், பட்டினத்தார் பாடல்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிஞர்களும் மரணத்துக்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என்கிறார்கள்.
கிரேக்க தத்துவஞானியான பிளேட்டோ, “மனிதன் இறந்ததும், அவனுடைய கர்மவினையின்படி மிருக உடலும்கூட எடுப்பான்” என்று கூறியிருக்கிறார். திபெத்தின் தந்திரா ஞானியான மார்பா, “மரணம் என்பதைக் கொண்டாடுங்கள். அது ஆன்மாவின் விடுதலை, அது வேறு நிலையை அடைகிறது” என்கிறார். ஜென் ஞானியான பொகுயூ, “கர்மவினைகளைத் தீர்த்து, ஞானமடைந்தவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை; மற்றவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்” என்று கூறியிருக்கிறார். புத்தர் ஜாதகக் கதைகள் மட்டுமல்ல, புத்தரே “மைத்ரேஜன் என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் நவீன அறிவியல், “மரணம் உடலுக்கு இறுதியானது. மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது இல்லவே இல்லை. மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது கட்டுக்கதை. மரண பயத்தைப் போக்க உண்டான பழங்காலக் கட்டுக்கதை; உடல் அழிந்துபோவதைப் போல ஒருவனின் எண்ணங்களின் தொகுப்பும் மூளையில் மறைந்துவிடுவதால் இறப்பு முழுமையாகிறது” என்கிறது அறிவியல்.
ஆனால் ஆன்மிகமோ, “ஆன்மா, அழிவற்றது. மரணம் என்னும் மாற்றத்தில் நாம் சிறிது நேரம் உறங்குகிறோம். ஆனால் நாம் என்றுமே அழிக்கப்பட முடியாத ஆன்மாக்கள்” என்கிறது. மரணத்துக்குப் பின் பயணிக்கும் ஆன்மாவின் பயணங்களை கருடபுராணம் பலவிதமாக விரித்துரைக்கிறது.
இதற்கு வலுவூட்ட 1944-ம் ஆண்டில் தலைசிறந்த உளவியல் அறிஞர் கார்ல் ஜங் தனக்கு உண்டான மாரடைப்பும் அப்போது உருவான அசாதாரண சூழல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில் உடலை விட்டு அவர் உயிர் பிரிந்து சென்றதாகவும், இந்தப் பூமியை விட்டுச் சென்றபிறகு சில மைல்கள் தொலைவில் மேலே இருந்து பார்த்ததாகவும் வியந்துள்ளார். அவர் அண்டசராசரத்தில் பார்த்த விண்வெளிக் காட்சிகள் யாவும் பின்னர் விண்வெளி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது ஆச்சர்யம்.
புகழ்மிக்க மருத்துவர் ரேமண்ட் மூடி, 1975-ம் ஆண்டு எழுதிய ‘வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை’ என்ற நூல்தான் உலக அளவில் இறப்புக்குப் பின்னான வாழ்க்கை குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ள செய்தது. 150 பேரிடம் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், ஒரேவிதமான 9 விதமான உணர்வுகளை அவர்கள் அனுபவித்ததைப் பதிவு செய்தன. இதை டாக்டர் பிம் வான் லோம்மெல், டாக்டர் மைக்கேல் சாபொம், டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் போன்றவர்களும் பிறகு ஆய்வுகள் செய்து உண்மை என அறிவித்தனர்.
எல்லோரும் கூறிய அந்த 9 வகை உணர்வுகளும் ஏறக்குறைய நமது புராணங்கள் சொன்னதைப் போலவே இருந்தது ஆச்சர்யம். மரணிக்கும் தறுவாயில் கடந்துவந்த வாழ்க்கைப் பயணம் யாவும் கண்முன்னே தோன்றுதல், ரீங்கார ஒளியால் பரவசம், சிறிய வலியோடு உடலை விட்டு உயிர் பிரிதல், விண்வெளியில் ஆன்மா பயணித்தல், சுரங்கவழிப் பயணம், ஒளிமிக்க சிலரின் தரிசனம், அகன்ற ஜோதியைக் காணல், வாழ்க்கை முடிவடைவதில்லை என்று உணர்தல் என ரேமண்ட் மூடி தொகுத்த ஆய்வுகள் நமது புராணங்களைப் பிரதிபலித்தது அதிசயம்.
இதுபோலவே கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கென்னத் ரிங் என்ற ஆய்வாளர், இறப்பின் இறுதிவரை சென்று வந்த சுமார் 100 பேரிடம் மரணத்துக்குப் பிறகான நிலையினைக் கேட்டு அறிந்தார். இது 1980-ம் ஆண்டில் வெளியானது. அதில் பாதிக்கும் மேலானோர் சொன்னவை ஆச்சர்யமானவை.
‘உயிர்விட்டுப் போன சூழலில் ஆழ்ந்த அமைதி, வண்ண ஒளி, உடலைவிட்டு உயிர் நீங்கும்போது சிறிய வலி, இருட்டு சுரங்கப் பாதை பயணம், பெரும் வெளிச்சத்தைக் காண்பது, அங்கு வண்ணமயமான ஒளியை தரிசிப்பது’ என்று ஒரேமாதிரியான தகவல்கள் இருந்தன. அதிசயமாக பிறவியிலேயே பார்வை இல்லாதவர்கள்கூட உடலை விட்டுப் பிரிந்த பின் பூமியையும், விண்ணையும் தெளிவாகக் கண்டதைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையும் மறுத்து, இவை யாவும் நம்பிக்கை விஷயங்கள்தான். மற்றவர் சொல்லி அதையே நம்பும் காரியம்தான் என்கிறது அறிவியல்.
பூமிக்குச் சொந்தமான உடல் பூமியிலேயே கலந்துவிடுகிறது. விண்ணுக்கு உரிமையான ஆன்மா, விண்ணவனின் ஆணைப்படி மீண்டும் பிறக்கவோ, மேல் உலகம் செல்லவோ செய்கிறது என்கிறது ஆன்மிகம். மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பைத் தடுக்க நவீன மருத்துவத்தால் முடியும். ஆனால் அதற்கான நடைமுறைகளைக் கண்டறிய இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம் என்கிறது அறிவியல்.
இறப்பு ரகசியமாக இருக்கும்வரைதான் வாழ்க்கை சுவாரஸ்யம் கொள்கிறது. மரணத்துக்குப் பிறகு இதுதான் நடக்கும் என்பதை யாரும் வரையறுத்தும் சொல்லிவிடவில்லை. கற்பனைகள் சந்தோஷத்தையும் தைரியத்தையும் தரும் என்றால், மரணத்துக்குப் பிறகு மீண்டும் பிறப்போம் என்று நம்புவோமே!
“ஈசனே, உன் அமரத்துவ கரங்களில் நான் தாங்கப்பட்டுள்ளேன். கருணை கொண்ட நீ, என்னை விடுவித்து எங்கு அனுப்பினாலும் அதுவும் மகிழ்ச்சியே, அதைவிட மகிழ்ச்சி உன்னிடமே நான் இருப்பது. காரணம் உன் சாயலாக எழுந்த ஆன்மா நான்!”