விசாரணை கைதிகளை மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையினரின் மோசமான மனநிலையை காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏ.ஜி.மவுரியா உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர். உயரதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதனை அடுத்து இன்றைய விசாரணையின்போது, விசாரணை கைதிகளை மரணமடையும் வரை தாக்குவது காவல்துறையினரின் மோசமான மனநிலையை காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. போலீசார் போர்வையில் காவல்துறையிலேயே கும்பலை உருவாக்கி, காவல் மரணம், நில அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இதுபோன்ற கொடுங்குற்றங்களில் நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, மாநில அரசே நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.