மிஷ்கின் ஒரு திறந்த புத்தகம். படங்களில் மட்டுமே இருள் சூழந்து காட்சி அமைப்பவர், நிஜத்தில் ‘ஒளி’வுமறைவின்றி பேசுபவர். `பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துவிட்டு இப்போது மீண்டும் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார்.
மிஷ்கினை பத்தி நிறையவே தெரியும். சண்முகராஜா (நிஜப்பெயர்) பத்தி சொல்லுங்க..?
“பொதுவா நான் ஊர்கள், நகரங்களைச் சொல்றதில்ல. ஏன்னா, நகரங்களைக் கடந்துகிட்டே இருக்கேன். காரைக்குடி பக்கத்துல இருக்கற திருப்பதூர்ல உள்ள மிஷன் ஆஸ்பத்திரியில நான் பிறந்ததா எங்க அம்மா சொன்னாங்க. அப்புறம் என் அப்பாவுக்குத் திண்டுக்கல்ல வேலைனால அங்கேயும் கொஞ்ச காலம் இருந்திருக்கேன். அப்புறம் சென்னை வந்துட்டேன். எனக்கு ரெண்டு அண்ணன்கள். முதல் அண்ணன் கனகராஜு. அவருக்கு மனநலக்குறைவு ஏற்பட்டு ரொம்ப நாளா கீழ்பாக்கத்துல இருந்து இறந்துட்டார். நான் ‘நந்தலாலா’வை பார்க்கறப்ப அந்தக் கதை என் குடும்பக் கதையா இருந்துச்சு. இன்னொரு அண்ணன் சுரேஷ்குமார், பாசமிகு அண்ணன்… ரொம்ப வருஷமா என்னோடதான் இருந்தார். அவர் ஏசி மெக்கானிக். துபாய்க்கு வேலைக்குப் போனார். இப்ப அங்கதான் இருக்கார். என் தம்பி சுவாமிநாதன்… இப்ப ஆதித்யானு பெயர் மாத்தியிருக்கார். நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்து எங்கூட இருக்கார். ‘சவரக்கத்தி’ அடுத்து இப்ப ‘டெவில்’னு ஒரு படம் பண்றார்.
இப்ப என் மகள் கனடாவுல இருக்கா. ‘அப்பா உங்க கடைசி காலங்கள்ல கனடாவுல வந்து இருங்க’ன்னு சொல்றா… அதனால நான் எந்தச் ஊரை சேர்ந்தவனு சொல்றதை விட, யாதும் ஊரே யாவரும் கேளிர் மாதிரி இருந்துட்டே இருக்கேன். என் கிராமம், திண்டுக்கல், சென்னை எல்லாமே எனக்கு நிறைய கத்துக்கொடுத்திருக்கு. அதிலும் சென்னை என்னை சினிமாக்காரன் ஆக்கியிருக்கு.”
உங்களுக்கு சினிமா ஆசை எப்போ வந்துச்சு?
“அப்போ வரவே இல்ல. சின்ன வயசுல சினிமா பார்த்ததே இல்ல. என்கிட்ட அசிஸ்டென்ட்ஸ் வாய்ப்பு கேட்டு வர்றங்க பலரும், ‘நான் சின்ன வயசில இருந்தே சினிமா பார்க்கறேன் சார்’ன்னு சொல்வாங்க. அம்மா அப்பா சினிமாவுக்கு போறப்ப என்னையும் கூட்டிட்டு போவாங்க. அஞ்சு வயசில இருந்து 12 வயசு வரை நார்மலா ஒரு பையன் பார்க்கற மாதிரிதான் நானும் படங்கள் பார்த்திருக்கேன். ஆனா, சின்ன வயசில இருந்தே கதைகள் நிறைய படிப்பேன். என் பாட்டி நிறைய கதைகள் சொல்வாங்க. அவங்க சொல்லிக்கொடுத்ததை ஒரு வரப்பிரசாதமா பார்க்கறேன்.
நான் சினிமாவுக்கு வந்தது மிகப்பெரிய விபத்துன்னு சொல்லலாம். நான் வேலை பார்த்த இடத்துல 1,200 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதே சினிமா ஷூட்டிங்குக்குப் போனா 1,500 ரூபாய் கிடைக்கும். அதுக்காகத்தான் சினிமாவுக்குள் வந்தேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி 72 தொழில்கள் பார்த்திருக்கேன். இதை நிறைய பேர் நம்புவாங்களானு தெரியல. நம்பலைனாலும் கவலையில்ல. எனக்கு சத்தியம் அது. நான் உதவி இயக்குநர் ஆகணும்,.. மணிரத்னம் மாதிரி ஆகணும்ன்னு யோசிச்சதில்ல. சினிமாவை ஒப்பிடும் போது மத்த தொழில்கள்ல பெரியளவுல உழைப்பு இருக்காது. வேலை முடிச்சிட்டு வீட்டுக்குப் போனா, அந்தத் தொழிலுக்கும் எனக்கு தொடர்பு இருக்காது. ஆனா, சினிமா என் வாழ்க்கையா மாறிடுச்சு. அதன்பிறகு அதை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். இங்குதான் என் வாழ்க்கை அர்த்தப்படணும்னு தோணின பிறகு, அதுக்குப் பெரிய உழைப்பைக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரு காதலி மாதிரி சினிமாவை நேசிக்க ஆரம்பிச்சேன். அந்தக் காதல் இன்னும் எனக்கு குறையல.”
இயக்குநர் மிஷ்கினின் முழுமையான பேட்டியை, இந்த வீடியோவில் காணலாம்.