750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 14-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஜூலை, ஆகஸ்டில் இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு ஆகியவற்றுக்கு தகுதி சுற்றாக அமைந்து இருக்கும் இந்த தடகள போட்டியில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 750 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), தேஜிந்தர்பால் சிங் (குண்டு எறிதல்), முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), ஹிமா தாஸ் (200 மீட்டர் ஓட்டம்), டுட்டீ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த போட்டியில் களம் இறங்குவது கவனத்தை ஈர்த்துள்ளது.

போட்டியை நடத்தும் தமிழ்நாடு சார்பில் 65 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்களில் ஆரோக்ய ராஜீவ் (400 மீட்டர் ஓட்டம்), தருண் அய்யாசாமி (400 மீட்டர் தடை ஓட்டம்), சுப்பிரமணிய சிவா (போல்வால்ட்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), தனலட்சுமி, சுபா (100, 200 மீட்டர் ஓட்டம்), ஹர்ஷினி (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

போட்டி தினசரி காலையில் 6 முதல் 9.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் மின்னொளியில் நடைபெறும். சமீபகாலமாக தடகள போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழகம் உள்ளூரில் நடக்கும் இந்த தேசிய போட்டியில் அதிக பதக்கங்களை அறுவடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள போட்டி சென்னையில் நடைபெற இருப்பது இது 11-வது முறையாகும். இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா ஆகியோர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.