அவதூறு 'வீடியோ' விவகாரம் : நடிகர் தனுஷ் மீது பாடகி சுசித்ரா புகார்
சென்னை: சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டு, தன்னை பற்றி அவதுாறு பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் பின்னணியில், முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் உள்ளதாக, போலீசில் பாடசி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சினிமா பின்னணி பாடகி சுசித்ரா (46). சிலம்பரசன் நடித்த, வல்லவன் படத்தில் வரும், 'யம்மாடி ஆத்தாடி…' உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார்: 'யு டியூப்' சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்பவர், என்னை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி, வீடியோ வெளியிட்டு உள்ளார். 'மனநலம் பாதிக்கப்பட்டவர்; போதைக்கு அடிமையானவர். வாய்ப்புக்காக, பாலியல் இச்சைக்கு உடன்படுபவர்' என, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். பயில்வான் ரங்கநாதனை தொடர்பு கொண்டு, 'என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளீர்கள்; அதற்கான ஆதாரங்களை தாருங்கள்' என்று கேட்டேன்.
அவரிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. எனக்கும், அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து முரண்பாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இந்நிலையில், 2017ல் என், 'டுவிட்டர்' பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், டுவிட்டரில், 'சுசிலீக்ஸ்' என, கணக்கு துவங்கி, நடிகர், நடிகையரின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.
இதன் பின்னணியில், என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தேன். மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதால், என் சினிமா வாய்ப்புகள் பறிபோயின; வருமானமும் நின்று போனது.
தற்போது, என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன், அவதுாறு வீடியோ வெளியிட்டதன் பின்னணியில், கார்த்திக்குமார், தனுஷ், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது. தனுஷுக்கு வேண்டிய நபர்கள், ஏற்கனவே என் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். நான் தனியாக வசித்து வருகிறேன். இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. பயில்வான் ரங்கநாதன் மற்றும் அவருக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் பற்றி தீர விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.