போபால்,
ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் அக்கட்சி நீக்கியது.
இதற்கிடையில், மத கடவுளின் இறை தூதரை அவமதித்ததாக கூறியும் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்த கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் நேற்று மதியம் மத வழிபாட்டிற்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். ஒருசில பகுதிகளில் வன்முறையாளர் சாலைகளை மறித்தும், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் விரட்டியடித்தனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்தியபிரதேசத்தின் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஞானவாபியில் இந்து மத கடவுள் சிவனின் கோவில் இருந்தது உண்மை. சிவன் கோவில் அங்கு உள்ளது. அது அங்கு தான் இருக்கும். அதை நீரூற்று அமைப்பு என கூறுவது தவறு. இந்து மத கடவுள்கள் இருப்பது நிதர்சனமான உண்மை. நீங்கள் இந்து மத கடவுள்களை அவமதித்தால் நாங்கள் உண்மையை சொல்வோம். நீங்கள் எங்கள் உண்மையை சொல்லுங்கள் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், நாங்கள் உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது?. வரலாறு எங்கோ அழுக்கடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
யாரேனும் பேசினால் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்து மத கடவுள்களை கொண்டு அவர்கள் திரைப்படங்கள் இயக்குகின்றனர். நீண்டகாலமாக இதுபோன்ற திரைப்படங்கள் எடுத்து இந்துமத கடவுள்களை அவமதித்துள்ளனர். நீண்ட கால கம்யூனிச வரலாறு உள்ளது. இந்தியா இந்து மதத்தினருக்கு சொந்தமானது. இந்து மதம் தொடர்ந்து வாழும்’ என்றார்.