திருச்சி: தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டச் செயல்பாடுகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி தாயனூர் கிராமம் முன்மாதிரியாக விளங்கி வருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம்தேடிக் கல்வி என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தை திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் கிராமத்தில் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தையும் தாண்டிநல்லொழுக்கம், பேச்சுத் திறன், வாசிக்கும் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு இல்லம் தேடிக் கல்வியில் முன்னோடி கிராமமாக திகழ்கிறது.
இந்த கிராமத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 380 மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு 20 மையங்களில் 20 தன்னார்வலர்களைக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்துக்கு குழந்தைகள் ஆர்வத்துடன் வருவதற்காக மாலை நேரத்தில் சுண்டல் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து தற்போது பொதுமக்கள் தங்களின் திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், தாத்தா, பாட்டியின் நினைவு நாட்களில் சுண்டல் தயாரித்து அந்த மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் விநியோகிக்கின்றனர்.
சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 200 குழந்தைகளுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு காய்கறி விதைகளை வழங்கி அவற்றை தங்களது வீடுகளில் பயிரிடச் செய்துள்ளனர். வகுப்பறையைத் தாண்டி மற்ற விஷயங்களை குழந்தைகள் அறிந்து கொள்ள வசதியாக வீதி நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டைரிகள் வழங்கப்பட்டு, அன்றைய தினம் நடைபெறும் நிகழ்வுகளை அதில் எழுதவும் குழந்தைகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உடனிருந்து ஆலோசனை வழங்கி வரும் கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வுபெற்ற முதல்வருமான சி.சிவக்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உண்மையில் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை வெகுவாகக் குறைத்துள்ளது.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று விட்டுவீடு திரும்ப நேரமாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகள் களைப்பாகக் காணப்படுகின்றனர். அவர்களது களைப்பைப் போக்கினால்தான் அவர்களை கல்வியில் முழு ஈடுபாட்டோடு செயல்பட வைக்க முடியும் என்பதால்தான் சுண்டல் வழங்க திட்டமிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மையங்களுக்குத் தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்களை பெற்றோர் உதவியோடு தயாரிக்கும் பயிலரங்குகளை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு, கற்பித்தலின் போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு ஓவியம், விளையாட்டு, நடனம், நாடகம், கதை சொல்லுதல் ஆகிய பிற கலைகளும் பயிற்சியளிக்கப்படுகின்றன. குழந்தைகள் கூகுள் லென்ஸ், இணையவழிசொல்லகராதி, கூகுள் ரீடிங் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த புதுமையான முயற்சிகளுக்கு தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஆர்.ராஜமாணிக்கம் ஒருங்கிணைப்புடன், பொதுமக்களும், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களும், பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அலுவலர்களும் முழு அளவுக்கு ஒத்துழைத்து வருவதால்தான் இத்திட்டத்தில் தாயனூர் கிராமம் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்.