உக்ரைனிலுள்ள விளையாட்டுத் திடல் ஒன்றை முகாமாக மாற்றியிருந்த புடினுடைய கூலிப்படையினர் நூற்றுக்கணக்கானோர் உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு உக்ரைனிலுள்ள Kadiivka என்ற இடத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிலுள்ள அறைகளில் முகாமிட்டிருந்திருக்கிறார்கள் Wagner Group என்று அழைக்கப்படும் புடினுடைய கூலிப்படையினர்.
ஆனால், அந்த முகாமை நோக்கி உக்ரைன் படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்த, அங்கிருந்த சுமார் 300 கூலிப்படையினர் தாக்குதலில் கொல்லப்பட, ஒரே ஒருவர் மட்டும் உயிர்தப்பியதாக Luhansk மாகாண மேயரான Serhiy Haidai தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தாக்குதலைத் தொடர்ந்து, புடின் கூலிப்படையினர் முகாமிட்டிருந்த மொத்த இடமும் தீப்பற்றி எரிவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
இந்த Wagner Group எனப்படும் புடினுடைய கூலிப்படையினர், கிரீமியாவை சட்டவிரோதமாக தன்னுடன் ரஷ்யா இணைத்துக்கொண்ட காலகட்டத்திலிருந்தே உக்ரைனில் இரகசியமாக இயங்கிவருவதாகக் கூறப்படுகிறது.
அப்படி உக்ரைனில் செயல்பட்டுவந்த அந்த கூலிப்படையினர், 2014 முதலே அந்த விளையாட்டுத் திடலை ஆக்கிரமித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
இந்த Wagner Group என்பவர்கள் பெரும்பாலும் ரஷ்ய இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற படைவீரர்கள்தான். குழந்தைகளைக் கொல்வது, பெண்களை வன்புணர்வது, சித்திரவதை செய்வது, கொடூரமாக கொல்வது ஆகிய குற்றச்செயல்களைச் செய்பவர்கள் என அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரஷ்யப் படைவீரர்கள் சுமார் 30,000 பேர்வரை உக்ரைனில் கொல்லப்பட்டுள்ள நிலையில், புடினுக்கு இரகசியமாக உதவி வந்த கூலிப்படையினர் 300 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட விடயம் ரஷ்யாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.