தவாங் செல்லும் அந்தப் பாதையில் சற்று தொலைவில் தார்ச்சாலை காணாமல் போய்விட்டது. மலையேறும் பாதை மண் சாலையாகத்தான் இருந்தது. ஆங்காங்கே சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
மலை அடிவாரத்தில் இருந்து ஊட்டிக்கு சீரான தார்ச்சாலையில் 40 கி.மீ பயணித்தாலே வளைந்து வளைந்து செல்வதன் காரணமாக உடல் சோர்ந்து விடும். தட்பவெப்பநிலை மாறுவதால் தலைவலி கூட ஏற்படும். பேருந்தில் செல்கையில் அது அனத்தி அனத்திப் போகும்போது வாந்தி வரும் உணர்வுக்கும் ஆட்பட நேரிடும். மலைப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்ய உடல் ஒத்துழைக்க வேண்டும். ஊட்டிக்குச் செல்வதற்கே இப்படியென்றால் மண் சாலையில் சராசரியாக 300 கிமீ பயணம் செய்வதை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் மலைப்பாகத்தான் இருக்கிறது. மஜ்ஜுலியில் எடுத்துக் கொண்ட ஓய்வு என் உடலை அப்பயணத்துக்குத் தயார்படுத்தியிருந்தது. பனிபொழியும் தவாங்கைக் காணும் ஆவல் என் மனதை தயார்படுத்தி விட்டதால் அப்பயணம் கடினமாக இருந்தாலும் அதை நான் பெரிதாக உணரவில்லை.
அருணாச்சல பிரதேசம் ஒரு புத்த பூமி. அம்மாநிலத்தில் ‘தவாங்’ மிகமுக்கிய புத்தத் தலமாக விளங்குகிறது. அசாமில் காணாத அந்த மங்கோலிய முகங்களை மீண்டும் அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைந்ததும் பார்த்தேன். வழியில் பல கிராமங்களைக் கடந்து சுமோ சென்று கொண்டிருந்தது. எனக்கு தவாங்கில் தங்குமிடத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தோன்றியது. பனிபொழியும் இரவில் அந்த நகரில் இறங்கி விடுதி தேடி அலைவதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இருட்டியதுமே ஊரடங்கி விடுகிற அனுபவத்தை நாகாலாந்தில் எதிர்கொண்டது என்னுள் எச்சரிக்கை உணர்வைக் கொடுத்திருந்தது. கைகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் டாட்டூக்களும், வலது காதில் கடுக்கனும் குத்தியிருந்த சுமோ டிரைவரிடம் தங்குமிடம் குறித்துக் கேட்டேன். “ஒன்றும் பிரச்னை இல்லை, நான் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று அவர் கூறிய பிறகு ஆறுதல் கொண்டேன்.
அந்த மலைப்பாதையின் பக்கவாட்டு முனைகளில் எந்தத் தடுப்பும் இல்லை. வண்டி கொஞ்சம் தவறினாலும் கவிழ்ந்து விடும் என்கிற சூழலில்தான் அவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். வலப்புறம் இருந்த பள்ளத்தாக்கில் கண்ணாடியின் நீர்ம வடிவாய் ஓடை ஓடிக்கொண்டிருந்தது. இளநீல நிறத்தில் கடல் நீரை ஒத்திருந்தது. அங்கு சென்று அந்த நீரில் கால் நனைக்க வேண்டும் போலிருந்தது. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இடையே சாப்பிடுவதற்கும், தேநீர் பருகுவதற்கும் மட்டுமே சுமோ நிறுத்தப்படும். அதையும் நாம் துரிதமாகச் செய்தால்தான் இரவு 10 மணிக்குள்ளாவது தவாங்கை சென்றடைய முடியும்.
சுமோ குலுங்கிக் குலுங்கிச் சென்றது. ஒரு கட்டத்தில் அதன் விளைவான அசைவுகளுக்கு உடலே தயாராகியிருந்தது. அந்த விசை உந்தித் தள்ளுவதற்கு முன்பாக உடலே தன்னை அந்த விசையோடு பிணைத்துக் கொண்டு இருபுறமும் போய் வந்து கொண்டிருந்தது. பரிச்சயப்படாத ஒரு நிலப்பரப்பினை வேடிக்கை பார்த்தபடியே நம்மால் எத்தனை கிலோ மீட்டர் தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும் என்பது மேலும் உறுதியானது. இடை இடையே சிறு இளைப்பாறுதல் மட்டும் இருந்தால் போதும் என்று தோன்றியது. தவாங்கிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பும்லா பாஸ் இந்திய – சீன எல்லைப்பகுதி. லடாக்கைப் போலவே எந்நாளும் பனிபொழிந்து கொண்டிருக்கும் அப்பகுதிக்குச் செல்ல பிப்ரவரி மாதத்தில் அனுமதியில்லை என டிரைவர் சொன்னார். தவாங்கில் பார்க்க வேண்டிய இடம் குறித்துக் கேட்ட போது தவாங் நகரைச் சுற்றியே பிரதானமான தலங்கள் அமைந்திருப்பதாக டிரைவர் சொன்னார். அப்போது எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் ஆங்கிலத்தில் எனக்கு சில தகவல்களைக் கொடுத்தது. அவன் பெயர் ஆஷு யாதவ். டெல்லியைச் சேர்ந்த அவனும் தனிப்பயணியாக தவாங் வந்திருக்கிறான். இருவரும் தத்தம் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஸூகு பள்ளத்தாக்குக்குச் செல்ல வேண்டும் என அதுகுறித்த தகவல்களை ஆஷு கேட்டான். நான் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி எனது பயண அனுபவத்தைச் சொன்னேன்.
சுமோ பயணத்தின் சோர்வையும் சலிப்பையும் உணராமல் இருக்க நாம் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். தவாங் மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததிலிருந்தே ஜியோ நெட்வொர்க் சரியாக வேலை செய்யவில்லை. சில இடங்களில் மட்டும்தான் சிக்னல் கிடைத்தது. தவாங்கில் ஜியோ நெட்வொர்க் அறவே இல்லை என டிரைவர் சொன்னார். தவாங்கிலிருந்து திரும்பும் வரையிலும் மொபைல் பயன்படுத்த முடியாது என்பதால் இது போன்ற உரையாடல்கள், வேடிக்கை பார்த்தல் வழியாகத்தான் நேரத்தைக் கடத்தியாக வேண்டும். எந்தச் சூழலாயினும் அதற்கு நம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து விட்டால் நம்மால் அதன் இடர்களை எதிர்கொள்வது கடினமாக இருக்காது. மதிய உணவும் வழக்கம் போல சாப்பாடு, தால் தான்.
மாலை 4 மணியான போது தேநீர் இடைவேளைக்காக ஒரு கிராமத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. டிரைவர் அங்கிருந்த மதுபானக்கடையைக் காட்டி ஏதாவது வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளும்படி சொன்னார். அதுவரையிலும் எனக்கு அப்படியோர் எண்ணமே இருக்கவில்லை. என்னுடன் சுமோவில் வந்தவன் கடையை நோக்கிப் போகவே நானும் அவனுடன் சென்றேன். அந்த சுமோ பயணம் உடலை சோர்வாக்கியிருந்தது. இன்னும் 4 – 5 மணி நேரம் பயணம் செய்தாக வேண்டிய சூழலில் நான் இரண்டு டின் பியர்களை வாங்கிக் கொண்டேன். அந்தச் சூழலுக்கு அது ஓர் இளைப்பாறுதலாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை.
அங்கிருந்து பயணப்பட்ட ஒரு மணி நேரத்தில் இருள் சூழத்தொடங்கியிருந்தது. பனிபொழிய ஆரம்பித்தது. நாம் சீலா பாஸ் வந்துவிட்டோமா என்று ஆஷு கேட்க, டிரைவர் ஆமாம் என்றார். சீலா பாஸ் என்பது தவாங் செல்லும் பாதையில் இருக்கக் கூடிய மிக உயரமான மலைப்பகுதி.
கடல் மட்டத்திலிருந்து 4,170 மீட்டர் உயரமான மலைப்பகுதி. ஊட்டியைவிட இரண்டு மடங்கு உயரம். சீலா பாஸில் சுமோக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. நான் கையில் டின் பீருடன் சுமோவிலிருந்து கீழே இறங்கினேன். என்னைச்சுற்றி வெண்மை ஒளிர்ந்து கொண்டிருந்தது. கொட்டிக்கிடக்கும் பனிப்பரப்பில் நடப்பது கடற்கரை மணலில் நடப்பதைப் போலவே இருந்தது. அந்த குளிரில் டின் பீர் அருந்துவது முற்றிலும் முரணாக இருந்தாலும் என் வாழ்வில் முதல் முறையாக பனிப்பொழிவில் நனைகிற அந்த கனவுத் தருணத்தின் சிறு கொண்டாட்டமாக நினைத்துக் குடித்தேன். சீலா பாஸின் தவாங் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதப்பட்ட ஆர்ச்சைக் கடந்து சென்று சுமோவில் ஏறியபோது முழுமையாக இருட்டி விட்டது.
– திரிவோம்…