ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை 8-க்கும் மேற்பட்ட முறை பெற்று விற்பனை செய்த வழக்கில், சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் சட்டவிரோதமாக கருமுட்டை பெறப்பட்டதா என்பது குறித்து கண்டறிய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல்கட்டமாக சேலம், ஓசூர் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராவதுடன், கருமுட்டை வழங்கியவர் மற்றும் சிகிச்சை பெற்றவர்கள் விவரத்தை எடுத்துவர காவல் துறை உத்தரவிட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் எதிரொலியாக, இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறினால் 3 முதல் 8 ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.