டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசவுள்ளார். புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகளும் பங்கும் அதிகளவில் தேவை என்பதால் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளனர். குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளை பாரதிய ஜனதாவும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் தென்மாநிலங்களை ஒன்றிணைத்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்துவதற்கு திட்டங்களை வகுத்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு சமமாக எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பும் தேவை என்றும் அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்த்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்வது குறித்து ஆலோசனை ஏதும் நடைபெறவில்லை என்றார். இருப்பினும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நாளை சந்திக்க உள்ளதாக கூறிய சரத் பவார், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.