காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் செயல்படாமல் உள்ளன.
மேலும் நகரில் 30 சதவீதம் கண்காணிப்பு கேமராக்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
காரைக்குடி நகரில் குற்றங்களை தடுக்கவும், கடத்தல்களை கட்டுப்படுத்தவும் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓ.சிறுவயல் சாலை, ரயில்வே ரோடு பழனியப்பா ஆர்ச் அருகில், கற்பக விநாயகர் நகர் அறிவியல் பல்கலைக்கழகம் அருகில், கோவிலூர், தேவகோட்டை ரஸ்தா, லீடர் ஸ்கூல் அருகில், நேமத்தான்பட்டி உள்ளிட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டன.
இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, இரவு நேரங்களில் போலீஸாரும் பணியில் இருந்தனர். அவர்கள் அடிக்கடி வாகனச் சோதனையில் ஈடுபட்டு சமூக விரோதிகளை கண்காணித்து வந்தனர்.
மேலும் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்கவும் நகரில் 2019-ம் ஆண்டு பழைய பேருந்து நிலையம், ஃபஸ்ட் பீட், செகண்ட் பீட், கொப்புடையம்மன் கோயில், பெரியார் சிலை, நூறடி சாலை, புது பேருந்து நிலையம், வாட்டர் டேங்க் உள்ளிட்ட 49 இடங்களில் போலீஸார் சார்பில் கண்ணகாணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து கேமராக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்பட்டன. தற்போது பெரும்பாலான சோதனைச் சாவடிகள் போலீஸார் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. அங்குள்ள கேமராக்களும் பழுதடைந்துள்ளன.
தற்போது சோதனைச்சாவடிகள் சுவரொட்டி ஒட்டும் இடங்களாக மாறியுள்ளன. அதேபோல் நகரில் 30 சதவீதத்துக்கும் மேலான கேமராக்கள் இயங்கவில்லை.
இதனால் அண்மையில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின் றனர். குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில், சோதனைச்சாவடிகள், கேமராக்கள் இயங்காதது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.