புதுடெல்லி: ஜுலை 18-ல் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், பாஜக தலைமையிலான ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. இதில் வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 16-வது புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 4,809 பேர் இதன் வாக்காளர்கள் ஆவர்.
இவர்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 776 எம்.பி.க்களில் ஒருவரது வாக்கின் மதிப்பு 700. மொத்தம் உள்ள 4,033 எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்புகள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும்.
எதிர்க்கட்சிகளுக்கு 180
தற்போதைய நிலவரப்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்கு இரு அவைகளிலும் சுமார் 440 எம்.பி.க்கள் இருக்க, எதிர்கட்சிக்கு இருப்பது 180 மட்டுமே. இவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸின் 36 எம்.பி.க்கள் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருப்பவர்கள். ஒரு சராசரி கணக்கெடுப்பின்படி, ஜுலை 18 குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431.
இதில், பாஜகவிற்கு 5,35,000 வாக்குகள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இவற்றில், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கான வாக்குகள் 3,08,000. இத்துடன் மாநிலங்களில் பாஜகவிற்கு அதன் கூட்டணியான அதிமுக மற்றும் இதர கட்சிகளான பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஹாரில் மட்டும் பாஜக கூட்டணியான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் வாக்குகள், பாஜகவிற்கு எதிராகச் செல்லும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புதிய குடியரசுத் தலைவராகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என அறிந்தும் அதன் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் துவக்கி உள்ளது.
இதற்கான பணியில் அக்கட்சியின் தலித் சமூகத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இறங்கியுள்ளார். இவர் திரிணமூல் மற்றும் தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இவர்களுக்கு இடதுசாரிகள் ஆதரவும் கிடைப்பது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளரை, ஆளும் கட்சி அறிவித்த பிறகே எதிர்க்கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பெயரை வெளியிட உள்ளன. ஏனெனில், ஆளும் கட்சியின் வேட்பாளர், எதிர்க்கட்சியும் ஏற்கும் வகையில் அமையவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், தாம் முன்கூட்டியே அறிவித்தவரை எதிர்க்கட்சிகள் வாபஸ் பெறவேண்டி இருக்கும்.
இதற்கு ஏற்ற வகையில் பொதுவானவரை பாஜக வேட்பாளாராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வாய்ப்பை பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதா தளத்தினர் குரல் கொடுக்கத் துவங்கி உள்ளனர். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்குகள் அவசியத்தை பொறுத்து ஜூலை 21-ல்எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.