ஈரானில் திருட்டு வழக்கில் சிக்கிய 8 பேர்களுக்கு அவர்களின் விரல்களை துண்டித்து தண்டனையை நிறைவேற்ற தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் தெஹ்ரான் சிறைச்சாலையில் தற்போது குறித்த நபர்கள் தண்டனையை எதிர்பார்த்துள்ளனர்.
இவர்கள் 8 பேருக்கும் ஒரு கை விரல்கள் துண்டிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அவர்களில் மூவர் வடமேற்கு ஈரானில் உள்ள ஒருமியே சிறையில் இருந்து குறிப்பாக கை துண்டிக்கப்படுவதற்காக மாற்றப்பட்டனர்.
மேலும், தண்டனை நிறைவேற்றுவதற்கான இயந்திரம் தயாராகும் வரையில் குறித்த நபர்கள் காத்திருக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது.
தெஹ்ரானில் உள்ள எவின் சிறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சுகாதார மையம் ஒன்றில், அதற்கான இயந்திரத்தை நிறுவியுள்ளனர்.
மட்டுமின்றி சமீப நாட்களில் ஒருவருக்கு விரல்கள் துண்டிக்கப்பட்டு தண்டையும் நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, குறித்த தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும், கால தாமதம் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஷரியா சட்டத்தின்படி விரல்களை துண்டித்து தண்டனை நிறைவேற்றுவது இஸ்லாம் மதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மிகவும் அரிதாகவே குறித்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1979கு பின்னர் இதுவரை விரல்கள் அல்லது கை துண்டிக்க 356 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் தண்டனை நிறைவேற்றப்பட்டால், அந்த 8 பேர்களில் ஒவ்வொருவருக்கும் வலது கையில் இருந்து நான்கு விரல்கள் துண்டிக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, 2022 முதல் ஐந்து மாதங்களில் ஈரானில் குறைந்தது 168 பேர் தூக்கிலிடப்பட்டனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 50 சதவீதம் அதிகம் என தகவல் வெளியிட்டுள்ளனர்.